மற்றவை

நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுவது எப்போது?: விருதுநகர் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்

இ.மணிகண்டன்

கூடுதல் ரயில்கள் இயக்குதல், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளைப் பெருக்குதல் என விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுவது எப்போது என்ற ஏக்கத்தில் உள்ளனர் பயணிகள்.

எண்ணெய் உற்பத்தி, பருப்பு வகைகள், மிளகாய் வத்தல் மற்றும் மளிகைப் பொருள்களின் முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்குவது விருதுநகர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விருதுநகர் எண்ணெய் வகைகள், மளிகைப் பொருள்கள் அனைத்தும் வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் டன் கணக்கில் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால், விருதுநகர் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக இருந்துவந்தது.

பரபரப்பான குடிஷெட் பகுதி

தென்மாவட்டங்களை மதுரையுடன் இணைக்கும் வகையில் விருதுநகர் வழியாக ஏராளமான பயணிகள் ரயில்கள் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன. மிளகாய் வத்தல், பருப்பு வகைகள் மற்றும் மளிகைப் பொருள்கள் அனைத்தும் சரக்கு ரயில்கள் மூலமே வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இதனால் விருதுநகரிலுள்ள ரயில்வே குட்ஷெட் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொருள்களுக்கான சந்தையுள்ள பகுதியை நோக்கி விருதுநகர் வியாபாரிகள் இடம்பெயர்வு காரணமாக விருதுநகரில் வர்த்தகப் பரிமாற்றம் குறையத்தொடங்கியது. தற்போது, குறைந்த அளவில் மட்டுமே வர்த்தக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு விருதுநகர் மாவட்டத்தின் வழியாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடப்பில் திட்டங்கள்

மேலும், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை போன்ற ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமலேயே அந்தத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டில் சுமார் ரூ.200 கோடி செலவில் விருதுநகரிலிருந்து சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக தென்காசி, செங்கோட்டை வரை புதிய ரயில் தடம் அமைக்கப்பட்டது. இத்தடத்தில் பொதிகை விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், விருதுநகர் மாவட்டத்துக்குள் ரயில் நுழையும்போது பெட்டிகளில் போதிய இடமின்றி பயணிகள் தவித்து வருகின்றனர். இதனால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், மதுரை- செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்றும், மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக தூத்துக்குடி செல்லும் விரைவு ரயிலும் மதுரை- செங்கோட்டை விரைவு ரயிலும் அடுத்தடுத்து இயக்கப்படுவதற்குப் பதில் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட வேண்டும் என்றும், மதுரை- செங்கோட்டை இடையே கூடுதல் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும், விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்களின் கால அட்டவணை வைக்குமாறும், பிளாட்பாரங்களில் தொடர்ச்சியாக நிழற்கூரைகள் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே நிர்வாகம் நீண்ட நாள்களாக இந்தத் திட்டங்களைக் கிடப்பில் போட்டுள்ளதாக ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகாசி வரி செலுத்துவோர் சங்கப் பொருளாளர் தேன்ராஜன் மற்றும் விருதுநகர் நகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியபோது, பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுப்பதற்காக ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகியைச் சந்திக்கச் சென்றோம். எனினும் நாங்கள் கூறிய கோரிக்கை தொடர்பாக பதில் இல்லை என்றனர்.

SCROLL FOR NEXT