நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை தலைமை தபால் நிலையத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தபால் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தலைவர்கள், சாதனையாளர்கள், சிறப்புமிகு இடங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளிட்டவை தபால் தலையில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற உதகையிலுள்ள, தலைமை தபால் நிலைய பாரம்பரிய கட்டிடம் தபால் தலையாக வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், மலைகள், சிகரங்கள், வனங்கள் நிறைந்த பகுதியாக நீலகிரி விளங்கியதால், 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர்கள் குடியேறி பல கட்டிடங்களை கட்டினர். தற்போதும் அந்த கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. உதகை நீதிமன்றம், நூலகம், சலீவன் கல் பங்களா, தலைமை தபால் நிலையம், ரயில் நிலையம், ஸ்டீபன் சர்ச் உள்ளிட்டவை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவை. இதில் தலைமை தபால் நிலையம், நூலகக் கட்டிடங்கள் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்ததில் குறிப்பிடத்தக்கவை.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் 1826-ம் ஆண்டு கட்டப்பட்டது. தபால் அலுவலகம் துவக்கப்பட்ட காலத்தில் ஒரு எழுத்தர், இரு உதவியாளர்கள் மட்டும் பணிபுரிந்துள்ளனர். தற்போது 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
இந்த தபால் நிலையம் நூற்றாண்டை கடந்தும் பழமை மாறாமல் செயல்படுகிறது. இந்த கட்டிடத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தபால் நிலையங்களிலும் ரூ.5-க்கு விற்கப்படும் தபால் தலையில் இந்த பாரம்பரிய கட்டிடத்தை பார்க்கலாம். மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய சுற்றுலாவிலும் இந்தக் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.