தமிழகத்தில் ஜனநாயக முறைகள் மீறப்பட்டுள்ளது. பேச்சு , எழுத்து சுதந்திரமில்லாமல் போலீஸ் ஆட்சிதான் நடக்கிறது என விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகப்படுத்தி டாக்டர் ராமதாஸ் பேசும்போது குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழ் செல்வன் தலைமையேற்றார். ராமதாஸ் வேட்பாளரை அறிமுகப்படுத்தி மேலும் பேசியதாவது:
மாற்றுக் கட்சியினரும் பாமகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். மக்கள் மாற்றம் வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். 47 ஆண்டுகாலம் திராவிட கட்சியினர் தமிழகத்தை சின்னாபின்னமாக்கிவிட்டனர். மதுப் பழக்கம், சினிமா மோகத்தை விதைத்து, இலவசங்களை வாரிவழங்கி மக்களை பிச்சைக்காரர்களாக்கியுள்ளனர். நவம்பர் மாதத்தில் எப்போதாவது மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? நிர்வாகச் சீர்கேட்டால் இன்று நாளொன்றுக்கு 12 மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. பா.ம.க.வை பழி தீர்க்க 134 பேர்மீது குண்டர் சட்டமும் , தேசிய பாதுகாப்புச் சட்டமும் போடப்பட்டது. 133 பேர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் குரு, 4-வது முறையாக வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் கலவரத்துக்கு யார் காரணம்? காவல் துறை அதிகாரிகளே… உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். பா.ம.க. மீது தொடுக்கப்படும் வழக்குகளுக்கு மேலிடம் சொன்னது என்கிறீர்களே... எந்த மேலிடமும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டதில்லை.
இந்த ஆட்சியில் தர்மமும் நியாயமும் இல்லை. தமிழகத்தில் ஜனநாயக முறைகள் மீறப்பட்டுள்ளது. பேச்சு, எழுத்து சுதந்திரமில்லாமல் போலீஸ் ஆட்சிதான் நடக்கிறது. இப்போதே இந்த ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. 2014 எம்பி தேர்தலுக்கு பிறகு மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். 2014- ல் பா.ம.க. மாற்றம் தரப்போகிறது” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் வடிவேல் ராவணன், மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன், இசக்கி படையாச்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.