மற்றவை

திறப்பு விழா காணாமல் சிதைந்து வரும் ஓட்டேரி பூங்கா: ரூ. 1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டது

வ.செந்தில்குமார்

வேலூர் மாநகரில் சுற்றுலாத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா காணாமல் சிதைந்துவருகிறது.

வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதேநேரம், அரியூர் பொற்கோயில், சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் என சர்வதேச அளவில் வேலூர் மாநகரம் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.

இதனால், வேலூர் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, வேலூர் நகருக்கு சுற்றுலா மற்றும் பிற காரணங்களாக தினமும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதனால், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக வேலூர் ஓட்டேரி ஏரியை ஒட்டிய பகுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பூங்கா அமைக்கும் பணி சுறுசுறுப்பாக நடந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்த பணியில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், புல்வெளிகள், நடைப் பயிற்சி மேற்கொள்ள பாதைகள், பொதுமக்கள் ஓய்வாக அமர நாற்காலிகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.

அத்துடன் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதியும் செய்துகொடுக்கப் பட்டது.

3 கட்டங்களாக செய்துமுடிக் கப்பட்ட இந்த பூங்கா வேலூர் நகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருக்கும் என கருதப்பட்டது. ஏனென்றால் வேலூர் கோட்டை பூங்காவைத் தவிர நகரில் வேறு எங்கும் பூங்கா இல்லாத நிலை காணப்பட்டது.

ஓட்டேரி பூங்கா திறக்கப்பட்டால் ஓட்டேரி, விருபாட்சிபுரம், சாய்நாதபுரம், தொரப்பாடி, பாகாயம் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும், வேலூர் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாலமதி முருகன் கோயிலுக்கு சென்று வரும்போது ஓய்வெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், சுமார் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பூங்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு தளவாட சாமான்கள் பயன்படாமல் சிதைந்துவருகிறது. பராமரிப்பு இல்லாத பூங்காவில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது.

பூங்கா புல்வெளியில் புதர்கள் மண்டியிருக்கிறது. எனவே, பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்திகேயன் கூறுகையில், “சுற்றுலாத்துறை, மாநகராட்சி சார்பில் திமுக ஆட்சிக்காலத்தில் இந்த பூங்கா பணிகள் முடிந்தது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாறியதால் பூங்கா திறக்கப்படவில்லை.

வேலூர் எம்எல்ஏ மனது வைத்திருந்தால் நாங்களே அந்த பூங்காவை அப்போதே திறந்திருப்போம். இப்போது பயன்படாமல் இருக்கிறது. கோட்டை சுற்றுச்சாலையில் ஏற்படுத்திய பூங்கா தனியாரிடம் ஒப்படைக் கப்பட்டது. அங்கு பணம் வசூல் செய்வதால் பூங்காவிற்கு செல்ல பெரும்பாலானோருக்கு தயக்கம் உள்ளது. வேலூரில் பொழுது போக்கு பூங்கா இல்லாததால் ஓட்டேரி பூங்காவை இலவசமாக பொதுமக்கள் பயன் படுத்த அனுமதிக்க வேண்டும்” என்றார்.

பூங்கா திறப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டதற்கு, “சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்ட அந்த பூங்காவை, அவர்கள் திறப்பு விழா நடத்தி எங்களிடம் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் செல்வராஜிடம் கேட்டதற்கு, “பூங்கா பணி முடிந்த நிலையில் திறப்பு விழா தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பூங்காவின் புகைப்படங்களும் அனுப்பி யுள்ளோம். இந்த பூங்காவை தமிழக முதல்வர்தான் திறக்க வேண்டும். விரைவில் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT