மற்றவை

கிருஷ்ணகிரி: இது ஜல்லிக்கட்டு அல்ல… தட்டுக்கட்டு; சூளகிரியில் விநோத விழா

எஸ்.ராஜா செல்லம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே நடைபெற்ற தட்டுக்கட்டு எருது விடும் விழாவைக் காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் தட்டுக்கட்டு விழா வெகு பிரபலம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், கொம்பு சீவப்பட்ட காளைகளை திறந்த மைதானத்தில் பாயவிட்டு, இளைஞர்கள் அடக்குவர். ஆனால், சூளகிரி பகுதியில் நடக்கும் தட்டுக்கட்டு நிகழ்ச்சி சற்றே வித்தியாசமானது.

மூங்கில் தப்பைகளால் டைமண்ட் வடிவில் செய்யப்பட்ட தட்டை எருதுகளின் கொம்புகளில் கட்டி விடுவர். இந்த தட்டு மின்னும் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதில் பலவித பரிசுகள் கட்டப்படும். இந்த எருதுகள் திறந்த வெளி மைதானத்தில் அவிழ்த்து விடப்படும். அவற்றை விரட்டிச் சென்று, அதன் கொம்புகளில் கட்டப்பட்ட தட்டினை அவிழ்ப்பவர்கள் வீரர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், கொம்பில் கட்டப்பட்ட பரிசுத் தொகையும் அவருக்கே வழங்கப்படும்.

சூளகிரி அருகேயுள்ள சாமனப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தட்டுக்கட்டு விழா நடந்தது. கடந்த வாரம் தியாகரசனப்பள்ளி, ஒட்டர்பாளையம் ஆகிய ஊர்களில் இந்த விழா நடத்தப்பட்டது. மேலும், டி.கொத்தப்பள்ளி, தாசனபுரம் ஊர்களில் விரைவில் நடைபெற உள்ளது.

சூளகிரி பகுதியில் பொங்கல் முடிந்த பிறகு, ஒரு மாதம் வரை இந்த தட்டுக்கட்டு விழா நடக்கிறது. ஆபத்தே இல்லாத இந்த விளையாட்டுக்கும் காவல்துறை கெடுபிடி உள்ளது.

இந்தப் பாரம்பரியத்தை அழியாமல் காக்க அரசு முன்வர வேண்டும் என்பதே பலரது

எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT