மற்றவை

மதுரை: 4 அடி வீச்சரிவாளும், காங்கிரஸ் துண்டும்- அழகிரிக்கு வந்த வித்தியாசமான பரிசுகள்

கே.கே.மகேஷ்

மு.க.அழகிரி பிறந்த நாள் விழாவில் நாம் கண்ட வித்தியாசமான காட்சிகள் இவை.

பகுத்தறிவுப் பாதையில் வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் பிறந்த நாள் விழா கோயில் திருவிழா போல நடந்தேறியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அழகிரிக்கு படைத்தார்கள். தி.மு.க. தொண்டரணியைச் சேர்ந்த சோலை ரவி என்பவர், மு.க.அழகிரியை கருப்பணசாமியாக வர்ணித்து போஸ்டர் ஒட்டியதோடு, 4 அடி உயரமுள்ள ராட்சத வீச்சரிவாள்களை அவருக்கு ‘காணிக்கையாக’ கொடுத்தார்.

அதை அவர்கள் தூக்கி வந்த தோரணை, தொண்டர்களைப் பயமுறுத்தியது. நிறைய பேர் வெள்ளி, எவர்சில்வர் வீரவாள்களை பரிசளித்தார்கள். ஒருவர் ராட்சத கதாயுதத்தை அழகிரிக்குப் பரிசளித்தார்.

ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 20 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தார். கவுன்சிலர் கொடைவீடு அருண்குமார், மு.க.அழகிரியை சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் சாமி போல பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலையாக வடித்து ஊர்வலமாகக் கொண்டு வந்து, அழகிரியிடம் ஒப்படைத்தார்.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பினர் மு.க.அழகிரியின் பிளக்ஸ் போர்டுக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர். காரணம் கேட்டபோது, “ஸ்டாலின் ஆதரவாளர்கள் அண்ணனின் உருவபொம்மையை எரித்ததால், அந்த தீட்டு கழிவதற்காக இந்த பூஜையை செய்கிறோம்” என்றனர்.

கரகாட்டம், படுகர் ஆட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம், செண்டை மேளம், குதிரையாட்டம், பேண்ட் வாத்தியம், கொம்பூதி போன்றவையும் நடைபெற்றன.

காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் அழகிரிக்கு வாழ்த்துச் சொல்வதற்காக கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், மண்டபத்துக்கு வந்தனர். முன்னாள் சட்டப்பேரைவ உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் நினைவுப் பரிசும் வழங்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அவருக்கு காங்கிரஸ் கொடி நிறத்தில் பொன்னாடை போர்த்தினர்.

இந்த நிகழ்ச்சியை கவர் செய்வதற்காக, டைம்ஸ் நவ், ஹெட் லைன்ஸ் டுடே, என்.டி.டி.வி., ஏ.என்.ஐ., நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட ஆங்கில டி.வி. செய்தியாளர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால், அழகிரி ஆதரவாளர்களிடம் ஆங்கிலப் பேட்டி கிடைக்காமல் அவர்கள் சிரமப்பட்டனர். இதில், நிருபர் ஷாம் டேனியலின் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது இன்னும் சோகம்.

63 கிலோ எடையுள்ள கேக்கை அழகிரி வெட்டிய மறுகணமே, தொண்டர்கள் அதன் மீது பாய்ந்தார்கள். சிலர் மேடையில் நின்றபடி, கேக் துண்டுகளை அள்ளி கூட்டத்தினரை நோக்கி வீச ஆரம்பித்தனர். இதனால், முன்வரிசையில் இருந்தவர்கள் கேக் மழையில் நனைந்தனர். இரு நிமிடங்களில் 63 கிலோ கேக்கும் காலியானது.

நிகழ்ச்சியில் கருணாநிதி வேடம் அணிந்த 2 பேர் அழகிரிக்கு வாழ்த்து சொல்ல வந்திருந்தனர். அவர்களை ஒரு பொருட்டாக அழகிரி எடுத்துக்கொள்ளவில்லை.

மு.க.அழகிரி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதை அறிந்த நடிகர் நெப்போலியன் மலரால் ஆன கிரிக்கெட் மட்டையைப் பரிசளித்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT