மற்றவை

மதுரை: கிளாங்குளம் மக்களின் 12 ஆண்டு கால போராட்டம்; தீவான கிராமத்துக்கு தீர்வு எப்போது?

செய்திப்பிரிவு

உசிலம்பட்டி அருகே உள்ள கிளாங்குளம் மக்கள், தங்கள் கிராம சாலையைச் சீரமைக்கக் கோரி 12 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூர் சாலையில் சென்றால், இடதுபுறத்தில் கிளாங்குளம் எனும் பெயர் பலகை கண்ணில்படுகிறது. அந்தப் பலகையை நோக்கி உள்ளே சென்றால், சுற்றிலும் புளியமரங்கள் நிறைந்துள்ளன. முன்னர் பச்சை பசேலென்று இருந்த மரங்கள் தற்போது கிரசர் தூசியால் பட்டுப்போய் காட்சியளிக்கின்றன.

தீவாக மாறியது

பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலையோ, மிக மோசமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்வது சிரமமான காரியம் என்பதால், அந்த கிராமம் ஒரு தீவு போலவே இருந்து வருகிறது. தார்ச்சாலையா? செம்மண் சாலையா? என சிந்தித்துக் கொண்டே இந்த சாலையில் பயணித்தால், சுமார் 2 கி.மீ தூரத்தில் கிளாங்குளம் கிராமம் வரவேற்கிறது.

முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ள அந்த கிராமத்தில், சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாலை வசதி இல்லாமல், அக்கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

கூடுதல் நேரம், பணம் செலவு

பள்ளி மற்றும் கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களும், அவசர வேலையாக வெளியூர் செல்லும் பொதுமக்களும் காடனேரி கிராமத்தை சுற்றியே செல்ல வேண்டும். இதனால், இவர்களுக்கு கூடுதலான நேரமும், பணமும் செலவாகிறது. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இந்தக் கிராம மக்கள்.

அவர்கள் மேலும் கூறுகையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுத்தனர். ஆண்டுகள் பல கடந்துவிட்டதால், தற்போது சாலை முற்றிலும் பெயர்ந்து படுமோசமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. ஆட்டோக்காரர்கள் இந்த சாலையில் வருவதையே தவிர்த்து விட்டனர். எனவே, காடனேரியைச் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. தேர்தல் சமயங்களில், எங்கள் கிராமத்துக்கு வரும் வேட்பாளர்கள், சாலையைச் சீரமைப்பதாகக் கூறுகின்றனர். வெற்றி பெற்ற பின்னர் எங்களை மறந்து விடுகின்றனர். கிராமம் பக்கம் தலைகாட்டுவதில்லை.

சாலையை சீரமைக்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம். ‘சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. கூடிய விரைவில் சீரமைத்து விடுவோம்’ என கூறுகிறார்கள். இப்படியே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், நடவடிக்கை தான் ஏதுமில்லை என்றனர் அவர்கள்.

SCROLL FOR NEXT