மற்றவை

திருப்பூர்: 32 அடவுகளில் தேவராட்டம்!

இரா.கார்த்திகேயன்

கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.

தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.

தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.

தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.

தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.

தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.

ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.

இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.

தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.

இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, கம்பாளப்பட்டி போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT