மற்றவை

தனித்துவம் மிக்கவர் கே.பி.எஸ்.கில்

செய்திப்பிரிவு

இந்தியக் காவல்துறைப் பணியில் தனித்துவம் மிக்கவர் கே.பி.எஸ்.கில் (கன்வர் பால் சிங் கில்). வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்.

1981-ல் வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை யைப் பற்றி எழுத குவாஹாட்டி சென்றேன். அப்போது அங்கே வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தது. கில் அங்கே சட்டம் ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். பிரம்மபுத்திரா நதிக்கரையில் அவருக்கு தரப்பட்டிருந்த பங்களாவில் அவரைச் சந்தித்தேன்.

நான் பிறந்த 1957-ல் அவர் ஐ.பி.எஸ். அதிகாரி யாகியிருந்தார். வயது வேறுபாடு இருந்தாலும் எங்களுடைய நட்பு அன்று தொடங்கி, அவருடைய அந்திமக் காலம் வரை தொடர்ந்தது.

1995-ல் அவர் ஓய்வுபெற்ற பிறகு தொழில் ரீதியிலான சந்திப்பு எங்களிடையே தனிப்பட்ட நட்பாகவே வளர்ந்தது. இந்திய ஹாக்கி சம்மேளனத் தலைவராக அவர் பதவி வகித்தபோது அவருடைய செயல்பாடு ஹாக்கியைக் கொல்கிறது என்றே எழுதினேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவருடைய கடைசி நடை பேட்டியைப் பதிவு செய்தேன். ஹாக்கி இப்போது மறுமலர்ச்சி அடைந்துவிட்டது என்று எழுதியதற்காக என்னைச் செல்லமாகக் கண்டித்தார்.

அசாமில் அவரைப்பற்றி பல கதைகள் உண்டு, காரகேஸ்வர் தாலுக்தார் என்ற போராட்டக்காரரை அவர் எட்டி உதைத்ததால் இறந்துவிட்டார் என்று அவர் மீது ஒரு வழக்கு. டெல்லி உயர் நீதி மன்றத்தில் சாட்சி கூறவும் அவருக்காக வாதிடவும் யாரும் வரவில்லை. சண்டிகரிலிருந்து கே.டி.எஸ். துளசி என்ற வழக்கறிஞரை அழைத்துவந்தார்.

இப்போது 1983 பிப்ரவரியில் நடந்த அசாம் தேர்தலில் முதல்முறையாக இனப் படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறின. முதல் இனப் படுகொலைச் சம்பவம் மங்கள்தாய் என்ற இடத்திலும் பிறகு நெல்லியிலும் நடந்தன.

குவாஹாட்டியிலிருந்து பிரம்மபுத்திராவைக் கடந்து சென்றால் 70 கி.மீ. தொலைவில் இருப்பது மங்கள்தாய். அப்போது ராணுவத்தின் மேஜர் ஜெனரலுடன் உயர் நிலை ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

நானும் சீமா குஹா என்ற நிருபரும் பைக்கில் அங்கே சென்றுவிட்டோம். கூட்டம் முடிந்தபோது கும்மிருட்டு பரவிவிட்டது. ராணுவ அதிகாரியும் கில்லும் குறைந்த அளவு மெய்க்காவலர் படையுடன் குவாஹாட்டி நோக்கிப் புறப்பட்டனர்.

ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த மரப்பாலத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டு ஆயுதங் களுடன் எங்களுக்காகத் தயாராக நின்றனர். ராணுவ அதிகாரியோ சிறிய அணி மட்டுமே தன்னிடம் இருப்பது குறித்து கோபப்பட்டார். கில் அமைதியாக இருந்தார். மெய்க் காவலர்களைத் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தச் சொன்னார். 7 துப்பாக்கிகளும் ஒரேயொரு இலேசு ரக இயந்திரத் துப்பாக்கியும் மட்டுமே இருந்தன. கில் கையில் பூண் போட்ட பிரம்பு மட்டும்தான் இருந்தது. நான் கில்லிடம் ‘பிரச்சினை என்ன?’ என்று கேட்டேன். ‘நீங்கள் இருவர் எங்களோடு இருப்பதுதான் பிரச்சினை’ என்று கேலி பொங்கக் கூறினார்.

பற்றி எரிந்த மரப்பாலத்தை உற்று நோக்கினார். பாலத்தை அனைவரும் ஒரே சமயத்தில் கடக்காமல், ஒவ்வொருவராகக் கடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முதலில் ராணுவ அதிகாரியும் கடைசியில் நாங்களும் பாலத்தைக் கடந்தோம். பிறகு இரவில் அவருடைய பங்களாவில் சந்தித்தபோதும் எங்களை ஏன் பிரச்சினை என்று சொன்னார் என்று விளக்கவில்லை.

பிறகு பஞ்சாபில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியில் இருந்தபோது இந்தக் கேள்விக்கு விடை அளித்தார். “ஆயிரக்கணக்கான கலவரக்காரர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் எதிர்நோக்கி யிருந்தனர். எங்களிடம் ஆயுதங்களும் ஆள்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. ராணுவ மேஜரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலை யும் அவர்கள் கொன்றிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? இரண்டு நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது எங்களால் துப்பாக்கியால் சுட முடியுமா? பதிலுக்குக் கலவரக்காரர்கள் சுட்டால் எங்கள் உயிருக்கு மட்டுமல்ல, உங்கள் உயிருக்கும் யார் பொறுப்பு? அதைத்தான் பிரச்சினை என்றேன்” என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சந்தித்த போது காஷ்மீரில் கல்வீசும் கலவரக்காரர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படை எதிர்கொள்ளும் முறை சரியல்ல என்று கண்டித்தார். கல்வீசும் கும்பல்கள் மீது ஏன் துப்பாக்கியால் சுட முடியாது என்றும் விளக்கினார்.

சீக்கியர்களைச் சகட்டு மேனிக்குக் கொன்றவர் தான் கில் என்று பலரும் கண்டிக்கின்றனர். இதில் உண்மையே கிடையாது. காலிஸ்தான் கோரிக்கையை ஆதரித்த பல ஏழைகளுக்கு வேற்று மாநிலங்களில் லாரி சார்ந்த தொழிலை செய்து பிழைத்துக்கொள்ள வழிகாட்டினார்.

1984 தொடங்கி 1995 வரையில் 4 முறை பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றினார் கில். 1988-ல் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்களைக் கொண்ட ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ நடவடிக்கை மூலம் அமிர்தசரஸ் பொற்கோவிலிலிருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றினார். 3 நாள்களுக்கும் மேல் நடந்த அந் நடவடிக்கையில் 46 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பத்திரிகையாளர்களை உடன் வைத்துக்கொண்டு அச்செயலில் ஈடுபட்டார். ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்துக்குப் பிறகு வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் கில் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

1992-ல் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களின் வன்செயல்களுக்கு பஞ்சாபில் 5,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்துக்களும் பணக்கார சீக்கியர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பஞ்சாபை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கில் அந்த நிலைமையை 1993-ல் மாற்றினார். உள்ளூர் போலீஸார்தான் இந்தத் தருணங்களில் சிறப்பாகச் செயல்பட முடியும். ராணுவம், துணை நிலை ராணுவம் போன்றவை வெளியிலிருந்து அந்த இடங்களைச் சுற்றி வளைத்து, வேறு யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தால் போதும் என்பார்.

அவர் நன்கு செயல்பட அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவும் உள்நாட்டு பாதுகாப்பு இணையமைச்சர் ராஜேஷ் பைலட்டும் உதவினர்.

விருந்தொன்றில் குடிபோதையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக அவர் மீது புகார். விசாரணை முடிந்து அவருக்குத் தண்டனையும் தரப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும் ரொக்க அபராதத்தையும் குறைத்தது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,

இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

SCROLL FOR NEXT