மற்றவை

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்

ஹெச்.ஷேக் மைதீன்

தமிழகத்துக்கு மின்சாரம் தரும் 8 மின் நிலையங்களிலுள்ள 13 மின் உற்பத்தி அலகுகளில், தொழில் நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 3 நாட்களாக சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம்வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக மின்வெட்டு தளர்த்தப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில், 24 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் நிலையங்களான மேட்டூர் மூன்றாம் நிலை (600 மெகாவாட்), வடசென்னை இரண்டாம் நிலை (600 மெகாவாட்) மற்றும் வள்ளூரில் 500 மெகாவாட் கொண்ட இரண்டு அலகுகளிலும் சோதனை முறையில் மின் உற்பத்தி நடந்து வருவதால், தமிழக மின் வாரியம் தட்டுப்பாடில்லாமல் மின்சாரம் விநியோகம் செய்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் கடந்த இரு தினங்களாக மீண்டும் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. காலையில் இரண்டு மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் என்றும், நள்ளிரவு நேரங்களில் அவ்வப்போதும் மின் வெட்டு அமலானது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் வெட்டால் பொருள்கள் உற்பத்தி மற்றும் தனியார் நிறுவனங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய விநியோக மைய பொறியாளர் கூறும்போது, ’தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர், கைகா அணு மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு மின் நிலையங்களிலுள்ள சில குறிப்பிட்ட அலகுகளில், தொழில் நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தூத்துக்குடியில் ஒரு அலகு, வட சென்னையில் ஒன்று, நெய்வேலியில் 6 அலகுகள், மேட்டூரில் ஒரு அலகு, எண்ணூரில் ஒரு அலகு, வள்ளூரில் ஒரு அலகு மற்றும் கர்நாடகாவின் கைகா அணுமின் நிலையத்தில் இரண்டு என, தமிழகத்துக்கு மின்சாரம் தரும் மின் நிலையங்களிலுள்ள 13 அலகுகளில், சுமார் 2,790 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் சுமார் 1,800 மெகாவாட் அளவுக்கு, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு 800 மெகாவாட் அளவுக்கு மின் வெட்டு அமலானது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, தமிழக அனல்மின் நிலையங்களில், 2,595 மெகாவாட்டும், நீர்மின் நிலையங்களில் 1053 மெகாவாட்டும், எரிவாயு மின் நிலையங்களில் 271 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தியானது. காற்றாலை மூலம் 513 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. மத்திய அரசின் மின் நிலையங்களில், 2,795 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் தொகுப்புக்கு கிடைத்தது.

பாதிக்கப்பட்ட நிலையங்களில், கோளாறை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இரண்டு நாட்களுக்குள் நிலைமை சீரடையும் என்றும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT