திருமங்கலத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் அறிவிப்பு அப்படியே உள்ளது. அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவர் சமுதாய மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா, இன்று பசும்பொன் செல்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ராமநாதபுரம் மற்றும் மதுரையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ். இது அதிமுக அரசு மீதும் தேவர் சமுதாய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் செயல் தலைவர் நவமணி கூறியதாவது:
கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது தடையுத்தரவு என்ற பெயரில் போலீஸார் ஏகப்பட்ட கெடுபிடிகளை செய்துவிட்டார்கள். 12 ஆயிரம் பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் 34 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் தேவர் சமுதாயம் இருக்கிறது. இது தெரிந்துதான் அவர்களை சமாதானப்படுத்த வருகிறார். தேவருக்கு தங்கக் கவசம் அணிவித்தால் மட்டும் அதிருப்தி மறைந்துவிடுமா?
கமுதியில் உள்ள தேவர் கல்லூரியை அரசு ஏற்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அந்தக் கல்லூரி எந்த வளர்ச்சியும் பெறவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1995-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையத்தை ஜெயலலிதா அமைத்தார். அது இன்றுவரை டிபார்ட்மென்டாக உயர்த்தப்படவில்லை. 2005-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமங்கலத்தில் தேவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற 22.16 லட்சம் நிதி ஒதுக்கினார்.
இன்றுவரை நினைவு இல்லம் கனவு இல்லமாகவே இருக்கிறது. இதில் உள்ள தடைகளை தகர்த்தெறிந்து நினைவு இல்லப் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவரின மக்களிடம் உள்ளது.
தொழில் மற்றும் கல்வி வளர்ச்சி இல்லாததே தென்மாவட்ட சாதிக் கலவரங்களுக்கு காரணம் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கமிஷனும் கோமதிநாயகம் கமிஷனும் கொடுத்த அறிக்கைகளை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் ஜெயலலிதா செயல்வடிவம் கொடுத்தால் அனைத்து சமுதாயமும் அவருக்கு விசுவாசமாக இருக்கும்.இவ்வாறு நவமணி தெரிவித்தார்.