திண்டுக்கல்லில் மணல் கடத்தல், மரக்கடத்தல், பட்டா மாறுதல் மற்றும் பர்மிட் இல்லாத ஆட்டோக்கள், லாரிகள், பஸ்கள் மீது உதவி ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன உள்ளூர் முக்கிய அரசியல் புள்ளிகள், அவரை ஒரு மனநோயாளி போல் சித்தரித்து சர்ச்சைகளை கிளப்பி பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்ய வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லில் உதவி-ஆட்சியராக இருந்தவர் மதுசூதன்ரெட்டி. இளம் அதிகாரியான இவர் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளூர் கடத்தல்பேர்வழிகள், அரசியல் புள்ளிகளை அலற வைத்தார். இப்போதே, இவர் இப்படி இருக்கிறார், தேர்தல் நேரத்தில் எப்படி இருப்பாரோ என ஆடிப்போன உள்ளூர் ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அவரது மாற்றத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி, கடந்த 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று வேலூரில் பயிற்சி உதவி ஆட்சியராக ஓராண்டு பணிபுரிந்தார். திண்டுக்கல் உதவி ஆட்சியராக செப். 6-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல் வருவாய்துறை அதிகாரிகள் இதுவரை பார்க்காத அதிரடி நடவடிக்களை எடுத்தார். 15 நாளில் நீண்ட நாளாக அதிகாரிகள் "கவனிப்பு' காரணங்களுக்காக நிறுத்திவைத்திருந்த நியாயமான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 300 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். பட்டா வழங்க முடியாத ஆளும்கட்சி முக்கிய புள்ளி பரிந்துரை செய்த தகுதியில்லாத 200 மனுக்களை நிராகரித்தார்.
திண்டுக்கல்லில் நூற்றாண்டு காலமாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இதற்கு உள்ளூர் ஆற்றுப்படுக்கைகளில், மணல் கொள்ளையர்கள் மணல் அள்ளி ஆற்றை பள்ளத்தாக்குகளாகவும், புதை குழிகளாகவும் மாற்றியதுதான் முழுக்காரணம் என்பதை தெரிந்துகொண்ட அவர், மணல் கடத்தலைத் தடுக்க நேரடியாக களத்தில் இறங்கினார். திண்டுக்கல் அருகே சானார்பட்டியில் மணல் கடத்திய ஆளும்கட்சி முக்கியப் பிரமுகர்களுடைய நான்கு லாரிகளைப் பிடித்தார். மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்தந்த பகுதி தாலுகா தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
திண்டுக்கல் ஆட்டோ டிரைவர்களை அழைத்து, ஆட்டோவில் டிரைவர்கள் பெயர், தொலைபேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை பொதுமக்கள் வரவேற்றனர். கடந்த செப். 27-ம் தேதி அமைச்சர் விசுவநாதன் தொகுதிக்குட்பட்ட சிறுமலையில் அம்மா திட்டம் முகாம் நடந்தது. அமைச்சர் தொகுதி என்பதால் ஆய்வு பணிக்காக மதுசூதன் ரெட்டி, சில நாள் சிறுமலையிலே தங்கியிருந்து முகாம் ஏற்பாடு பணிகளை முன்னின்று கவனித்தார். அப்போது நேரடியாக அவரே வீடு, வீடாகச் சென்று மனுக்களை வாங்கியுள்ளார். அப்போது வனப்பகுதிக்குட்பட்ட இடங்களில் பட்டா வழங்கக் கோரி ஆளும்கட்சியினர் சிபாரிசு செய்து வழங்கிய மனுக்களைப் பார்த்து கோபமடைந்த உதவி ஆட்சியர், அந்த மனுக்களை வாங்காமல் நிராகரித்தார். இதனால், ஆளும்கட்சியினர் அவர் மீது ஆத்திரமடைந்து முக்கிய ஆளும்கட்சி பிரமுகரிடம் முறையிட்டுள்ளனர். இது தவிர பர்மிட் இல்லாமல் லாரியை ஓட்டிச்சென்ற ஓட்டுநர், செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர், குடித்துக்கொண்டிருந்த வன ஊழியர் போன்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் கோபத்தில் பஸ் ஓட்டுநரின் செல்போனை உடைத்ததும், வன ஊழியருடனான வாக்குவாதத்தில் பெஞ்சை உடைத்ததும் உதவி ஆட்சியருக்கு எதிரான நடவடிக்கைகளாக அமைந்தது. இத்தனைக்கும் பஸ் ஓட்டுநரிடம் அவரது பாதுகாப்பில் இருக்கும் பயணிகள் பற்றி அறிவுறுத்திவிட்டு செல்போனுக்கான கட்டணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்.
இதன் பிறகு உதவி ஆட்சியர் நடவடிக்கையால் பல வகையில் பாதிக்கப்பட்ட ஆளும்கட்சி முக்கியப் பிரமுகர், " உதவி ஆட்சியர் செக்போஸ்ட்டில் குடிபோதையில் ரகளை செய்தார், பெஞ்ச்சை அடித்து நொறுக்கினார், செல் போனை உடைத்தார், பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டார்” என அவருக்கு எதிர்மறையாக விவகாரத்தை திசைதிருப்பி சர்ச்சையை கிளப்பினர். இந்த சூழ்நிலையில்தான் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு கரியாம்பட்டி மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்துக்காக அங்கு வந்தனர். யாரிடம் பேசும் மனநிலையில் இல்லாத உதவி ஆட்சியர், பொதுமக்களை சந்திக்க விருப்பமில்லாமல் திருப்பி அனுப்பியுள்ளார். அப்போது பொதுமக்களுடனான வாக்குவாதம் முற்றி, அதிகாரிகளை விட்டு பொதுமக்களை அனுப்ப சொல்லியுள்ளார். அப்போது ஒருவர் படிக்கட்டில் இருந்து கீழே தடுமாறி விழுந்துள்ளார். உடனே, உதவி ஆட்சியர் மீதான கோபத்தில், அந்த கிராம மக்கள் மீது உதவி ஆட்சியர் கல்லை தூக்கி வீசினார் '' என மீண்டும் கிளப்பி விட்டனர்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் சேர்ந்துதான் ஒரு துடிப்பான அதிகாரியின் மாற்றத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதிரடி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை: எம்.எல்.ஏ.
இதுகுறித்து திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
உதவி ஆட்சியர் இங்கே பணியில் இருப்பது சில உயர் அதிகாரிகளுக்கு விருப்பமில்லை. இளம் அதிகாரியான அவர், மக்கள் பிரச்சினையில் ஆர்வமாகவும், துடிப்புடன் தலையிட்டு வருகிறார். அவரின் இந்த நேர்மையான நடவடிக்கை தவறான வழிகளில் வருமானம் பார்த்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அவரை இடமாற்றம் செய்ய சூழ்ச்சி செய்கின்றனர். மணல் கடத்தலைத் தடுத்ததால் அவரால் பாதிக்கப்பட்ட கடத்தல் புள்ளிகள் அவர் மீது கோபத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர். இந்த மாதிரி அதிகாரிகளை வரவேற்க வேண்டும். உதவி ஆட்சியர் தனக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அனுகுமுறையில் மட்டும் மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும். மற்றபடி அவரது நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.
“எங்கு சென்றாலும் அதிரடி தொடரும்”
உதவி ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி என்னுடன் பணிபுரிவர்களுக்குதான் தெரியும். நான் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. என்னுடைய அதிரடி நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
என் மனைவி முதல்முறையாக என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருடன் நான் சிறுமலைக்குச் சென்றேன். ஒரு பெண்ணை உதவி ஆட்சியர் குடிபோதையில் அழைத்துச் செல்கிறார், தகராறு செய்கிறார், பொதுமக்கள் மீது கல்லை தூக்கி வீசிகிறார் என என் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவிக்கின்றனர். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. நான் எதற்கு பொதுமக்கள் மீது கல்லை வீச வேண்டும். இந்த சம்பவங்களால் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். என்னை பொறுத்தவரையில் என்னுடைய வேலையில் யாருக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எங்கு சென்றாலும் என்னுடைய அதிரடி நடவடிக்கை தொடரும்'' என்றார்.