மற்றவை

வடசென்னையில் புது வகையான வைரஸ் காய்ச்சல்

சி.கண்ணன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, சென்னை யில் மழை பரவலாக பெய்து வருகிறது. வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் தூர்வாரப்படாமல் இருப்பதால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலை உள்ளது. தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, தங்கசாலை, மணலி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வடசென்னை பகுதியில் கடந்த 2 வாரங்களாக பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இதுவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவ மனையின் டாக்டர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனைக்கு தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்ததில் சிக்குன்குனியா, டைப்பாய்டு, எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு என அனைத்து விதமான காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதனால், இது என்ன காய்ச்சல் என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், அவர்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் கே.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் மலேரியா காய்ச்சல், சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல், டைப்பாய்ட், டெங்கு, டைப்பாஸ்ட் மற்றும் சாதாரண சளி காய்ச்சல் தான் உள்ளது. இந்த காய்ச்சல்களை பரிசோதனை மூலம் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். வடசென்னை பகுதியில் மர்மக்காய்ச்சல் எதுவும் இல்லை. இவற்றில் ஏதாவது ஒரு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். பன்றிக்காய்ச்சல் வைரஸ் பழையபடி இல்லை. பன்றிக்காய்ச்சல் வைரஸின் வீரியம் தற்போது குறைந்து சாதாரண சளி காய்ச்சல் பட்டியலில் வந்துவிட்டது. அதனால், பன்றிக்காய்ச்சலை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். வாந்தி பேதி, வைரஸ் உட்பட தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ மனைகளில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மற்ற நோயாளிகளின் வார்டில் அனுமதிப்பதில்லை. தொற்று நோயாளிகள் அதிக அளவில் வந்தால், கூடுதலாக வார்டுகள் அமைக்கப்படும்.

பொதுமக்கள் குளோரின் மருந்து போடப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி யாவதற்கு வாய்ப்பு தரக்கூடாது. வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால் எவ்விதமான காய்ச்சலும் வருவதற்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT