கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை முன் வைத்து, நண்பர்கள் கூட்டமைப்பு நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளது.
நோட்டாவும் ஏற்காடும்
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய, திரா விடக் கட்சிகள் உச்சகட்ட பரபரப்பில் இருப்பதோடு, கூட்டணி குறித்த தகவல்கள் ஊடகங்களில் பஞ்சமில்லாமல் வரத் தொடங்கியுள்ளன. ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள், அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. அதே போல் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நோட்டாவை பயன்படுத்த பல அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த களம் இறங்கியுள்ளன.
குமரி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் நிலையில், ‘நோட்டா’வுக்கு வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தேசிய நண்பர்கள் கூட்டமைப்பு - இந்தியா அமைப்பு ஈடுபட்டுள்ளது.
குமரி புறக்கணிப்பு
வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகம் முன், நோட்டாவுக்கு வாக்களிப்பதாக பொது மக்களிடம் கையொப்பம் வாங்க வந்திருந்த குழுவினரிடம் பேசினோம். இந்தியா சேர்மன் ஆதிக் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் புகழ் பெற்றது. அண்மைக்காலமாக இம்மாவட்டத்தை, அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இங்குள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மிக மோசமான நிலையில் உள்ளன.
கேள்விக்குறியான வாழ்வாதாரம்
சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. அரசு பஸ்கள் பாதுகாப்பானதாக இல்லை. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மீனவர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லத்தான் 1,70,000 பேரிடம் கையெழுத்து வாங்க இருக்கிறோம். பிரச்சினைகள் சீர் செய்யப்படாத பட்சத்தில் அனைவரையும் நோட்டாவுக்கு வாக்களிக்க கேட்டுள்ளோம். அதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவாகாத நிலையில், ஒவ்வொரு ஓட்டும் தேவை என்பதில் கட்சிகள் முனைப்பாக உள்ளன. இந்நிலையில், நோட்டாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் நண்பர்கள் கூட்டமைப்பால், குமரி மாவட்ட அரசியல்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.