மற்றவை

5 கேள்விகள் 5 பதில்கள்: ‘விவசாயிகளப் பார்க்க யாரு இருக்கா?’

கே.கே.மகேஷ்

ஆறுபாதி. கல்யாணம்

மக்கள், ஊடகம், அரசு இயந்திரம் எல்லோரின் கவனமும் அடுத்த முதல்வர் தொடர்பான விவாதத்திலேயே நிலைகுத்திப்போய் நிற்க, ‘எங்களையும் திரும்பிப் பாருங்கள்’ என்று கதறுகிறார்கள் விவசாயிகள். வயலும், வயிறும் காய்ந்துபோய் நிவாரணம் கேட்டு நிற்கும் தருவாயில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணத்திடம் பேசினோம்.

விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள்?

அப்பாடா, இப்பவாச்சும் உங்களுக்கு எங்களோட ஞாபகம் வந்துச்சே? நெல்லு, கரும்பு, வாழை, பயிறு, மஞ்சள்னு எல்லாப் பயிறும் கருகிப்போச்சு. விவசாயி செத்துக்கிட்டு இருக்கிறான். அரசியல் கூச்சல்களால விவசாயிகளோட சத்தம் வெளியே கேட்கல, அவ்வளவுதான்.

மத்திய குழுவினர் வந்து பார்த்தார்களே, நிவாரணம் கிடைத்ததா?

ம்ம்ம்.. வந்து பார்த்தாங்க, விசாரிச்சாங்க, குறிப்பெடுத்தாங்க, போய்ட்டாங்க. நிவாரணம்தான் வந்தபாடில்ல. மத்திய அரசுக் கணக்குப்படி நெற்பயிருக்கு எக்டேருக்கு 13,500 ரூபாதான் கிடைக்கும். ஏக்கருக்குக் கணக்குப் பார்த்தா, ஐயாயிரத்துச் சொச்சம்தான் வரும். விவசாயிங்க ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் கேட்டுக்கிட்டிருக்கோம். சீக்கிரமா மாநில அரசு தன்னோட சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்கணும். உயிரைக் கையிலப் பிடிச்சிக்கிட்டு இருக்கிற விவசாயிகளுக்கு உடனே கை கொடுக்கணும்.

பயிர்க்காப்பீடு திட்டம் விவசாயிகளைக் காப்பாற்றவில்லையா?

போன வருஷத்துக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையே இன்னும் வந்து சேரலையே? இந்த ஆண்டு சம்பா பயிர் சேதத்தை வந்துப் பார்த்துட்டுப் போயிருக்காங்க. எல்லா வயல்களையும், எல்லாக் கிராமங்களையும் அவங்க பாக்குறது கிடையாது. குறிப்பிட்ட வட்டாரத்துல பாதிப்பு குறைவான வயல்களைப் பார்த்துட்டுப் போய்டுறாங்க. அரசாங்கத்தையே கேள்வி கேட்க முடியாத காலத்துல, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை யார் கேக்குறது?

தப்பி விளைந்த நெல்லுக்காவது நல்ல விலை கிடைத்ததா?

இந்த வருஷம் நெல்லுக்கு விலை மோசமில்ல. ஆனா, பல ஊர்கள்ல அரசுக் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால, வியாபாரிகள் சொன்னதுதான் விலைன்னு ஆய்டுச்சி. தொலைதூரத்தில இருக்கிற அரசு கொள்முதல் மையங்களுக்கு போக்குவரத்துச் செலவு கையைக் கடிக்கும்ங்குறதால, வியாபாரிகள் கிட்டே விற்கிற நிலைக்கு விவசாயிகள் இருக்காங்க. சில அரசு கொள்முதல் மையங்கள்ல, ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் வீதம் ஊழியர்கள் கமிஷன் வாங்குறாங்க. வெறும் 25 குவிண்டால், 30 குவிண்டால்நெல் விளைவிச்ச சிறு விவசாயிகள் கூட, இப்படி ரெண்டாயிரம், மூவாயிரம் இழந்திருக்காங்க.

அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

புது முதல்வர் முதல் வேலையா பாதிக்கப்பட்ட எல்லா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கணும். வறட்சியால் இறந்த, தற்கொலை செஞ்சிக்கிட்ட விவசாயிகள் எண்ணிக்கை 300-ஐத் தாண்டிடுச்சி. ஆனா, அரசோ வறட்சி காரணமா 13 பேர்தான் இறந்தாங்கன்னு சொல்லுது. கொஞ்சம் மனச்சாட்சியோட இதை மறுபரிசீலனை செஞ்சி, அந்த விவசாயிகளோட குடும்பத்தைக் காப்பாத்தணும். ஒவ்வொரு மாவட்டத்துலயும் விவசாயிகள்கிட்ட ‘கருத்துக்கேட்புக் கூட்டங்கள்’ நடத்தப்படணும். அதில், அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ கலந்துக்கக் கூடாது. அப்படிக் கலந்துகிட்டா விவசாயிகளை வெளிப்படையாக பேச அனுமதிக்கிறதில்ல. எங்கப் பிரச்சினையைச் சொன்னாலே, அரசை விமர்சிக்கிறதா நெனைக்கிறாங்க. தங்களைத் தாங்களே புகழ்ந்துதள்ளிட்டு கூட்டத்தை முடிச்சுடுவாங்க!

SCROLL FOR NEXT