மற்றவை

தென்தமிழனுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு?

எ.பாலாஜி

ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையிலிருந்த தமிழர் விடுதலைப் படை தென்தமிழன் உடல்நிலை சரியில்லாமல், தன்னுணர்வின்றி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

1980-களில் தமிழரசன் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையில் செயல்பட்டவர் தென்தமிழன். இவருக்கு கதிரவன், தட்சிணா மூர்த்தி என்ற பெயர்களும் உண்டு. உடையார்பாளையம் அருகில் உள்ள பருக்கல் இவர் ஊர். தமிழ்நாடு விடுதலைப் படையில் இணைந்து செயல்பட்ட காலத்தில் மறதியாற்றுப் பாலத்தில் குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1988-ல் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் 1989-ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையிலிருந்தார்.

மத்திய சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டு, கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தவரை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை யில் 66 வயதாகும் தென்தமிழனைப் பார்த்தபோது, மனிதர்களை அடையாளம் காணமுடியாமல் தன்னுணர்வின்றி படுத்த படுக்கையாக இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்பது புரிந்தது.

அவருடைய உடல்நிலை குறித்து தென்தமிழனின் 2-வது மகளின் கணவர் ஸ்டாலினிடம் கேட்டபோது, “ஒவ்வொரு நாளும் உடல்நிலை ரொம்ப மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இப்படி இருப்பவருக்கு துப்பாக்கியுடன் போலீஸ் காவல் நிற்கிறது. இரவில் அவருடைய கால்களைச் சங்கிலியால் கட்டி வைக்கிறார்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. இவரை விடுதலை செய்தால் எங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்துக்கொள்வோம்” என்றார்.

இது சம்பந்தமாக திருச்சி வழக்கறிஞர் கென்னடியிடம் கேட்டபோது, “தமிழக சிறைத்துறை விதி 632-ன்படி நோய்வாய்ப் பட்டிருக்கக்கூடிய சிறைக்கைதி விடுதலை தொடர்பாக ஒரு சிறைவாசி ஒரு நோயை அவராவே உருவாக்கிக் கொண்டிராத பட்சத்தில் நோயின் தன்மை ஆபத்தாகவும் குணப்படுத்த முடியாத நிலையில் இருந்தால் அவரை விடுதலை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம்” என்றார்.

தென்தமிழனை மனிதாபிமான அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் விடுதலை செய்யுமா அரசு?

SCROLL FOR NEXT