ஆவடி பெருநகராட்சியில் கட்டப்பட்ட காய்கனி வணிக வளாகம், திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை வைப்பதால், ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறு, குறு வியாபாரிகள் என 80க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அத்துடன், 100க்கும் மேற்பட்ட தற்காலிக வியாபாரிகளும் கடை வைத்துள்ளனர்.
நேரு பஜார் பகுதியை ஒட்டியுள்ள புதிய ராணுவ சாலையில் இக்கடைகள் உள்ளன. இக்கடைகளில் பெரும்பாலானவை கூரை வேயப்பட்ட கட்டிடத்திலும் தள்ளு வண்டிகளிலும் செயல்படுகின்றன. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன், காய்களை வாங்க வரும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இதனால், தங்களுக்கு நிரந்தரமான ஒரு வணிக வளாகத்தை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் தொகுதி எம்.எல்.ஏ.விடமும் நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத் துறை அமைச்சருமான அப்துல் ரஹீம் தனது 2011-12-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அத்துடன், நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் மொத்தம் 68 கடைகள் உள்ளன.
பயன்பாட்டுக்கு வரவில்லை
இந்த வணிக வளாகத்தை அமைச்சர் அப்துல் ரஹீம் கடந்த அக்டோபர் 18-ம் தேதி திறந்துவைத்தார். திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், புதிய ராணுவ சாலை ஆவடி-பூந்தமல்லியை இணைக்கும் முக்கிய சாலையாகும், இச்சாலையில் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளை இச்சாலை இணைப்பதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் இவ்வழியாக செல்கின்றன.
இந்நிலையில், வியாபாரிகள் இச்சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், அழுகிய காய்கறிகள் சாலையிலேயே கொட்டப்படுவதால், அவற்றை உண்பதற்காக மாடுகள் வருகின்றன. அவையும் சாலையை மறித்து படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காய்கறி வணிக வளாகத்தை அமைச்சர் திறந்து வைத்துவிட்டாலும், கடைகள் அனைத்தும் முறைப்படி டெண்டர் விடப்பட்டுதான் வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்படும்.
டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு வணிக வளாகம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.