ஊழல் நடைபெறுவதற்கு எந்தத் துறையும் விதிவிலக்கல்ல. எங்குமே நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஊழலின் கோரப்பிடியிலிருந்து கடைக்கோடியில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழைகளான துப்புரவுத் தொழிலாளர்களும் தப்பவில்லை. யார் யாரை சுரண்டவேண்டுமென்பதில் அதிகாரிகளும் விதிவிலக்கை பின்பற்றுவதில்லை.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் பரிதாப நிலைதான் இது. இவர்களது ஊதியத்தில் கைவைப்பதில் ஒப்பந்ததாரர்களோடு அதிகாரிகளும் கைகோர்க்கின்றனர் என்பதே குற்றச்சாட்டு. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் நிரந்தரத் தொழிலாளர்களாக 2 ஆயிரத்து 600 பேரும், ஆயிரத்து 56 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பதிலித் தொழிலாளர்கள் 260 பேர் ஓட்டுநர்களாகவும், கிளீனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதில், நிரந்தரமாகப் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசு சம்பளமாக ரூ.13 ஆயிரம் வரையும், சட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், தற்காலிகத் பணியாளர்களாக ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுபவர்களுக்கு சம்பளம் பாதியளவு கூட கொடுக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ரத்தினக்குமார் கூறுகையில், 2 ஆயிரத்து 600 ஒப்பந்த மற்றும் பதிலிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.220 என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த சம்பளம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது ஒவ்வொரு ஒப்பந்த மற்றும் பதிலிப் பணியாளர்களுக்கும், நாள் ஒன்றுக்கு ரூ.110, ரூ.120 என்ற அளவிலேயே வழங்கப்படுகிறது. நிரந்தரமாக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத சம்பளம் சரியான அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.7 ஆயிரத்து 620 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தினசரி வெறும் ரூ.110 என்பதால், மாத சம்பளமாக ரூ.3 ஆயிரத்து 300 மட்டுமே வழங்கப்படுகிறது என்றார்.
அதிகாரி ஊர்ஜிதம்
ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பெரும்பான்மையான அளவில், துப்புரவுப் பணிக்கு செல்வபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்தப் புள்ளி எடுத்துள்ளார். 60 சதவீத பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஒரு விதத்தில் அதிகாரிகளுக்கு எளிதாக உள்ளது.
நிரந்தரத் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியாது என்பதால், ஒப்பந்ததாரர் மூலம் நியமிக்கப்படும், பணியாளர்கள் சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்கிறார்கள். மாதம் ரூ. 16 லட்சம் வரை சம்பள நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் ரூ.7 லட்சம் வரை மட்டுமே பணியாளர்களுக்குச் சென்று சேர்கிறது. மீதமுள்ள தொகை முழுவதும் அரசு அதிகாரிகளுக்கே செல்கிறது. நிர்வாகத்தின் அனைத்து தரப்பிற்கும் இதில் தொகைகள் பிரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக இ.எஸ்.ஐ, பிஎஃப் என பல்வேறு காரணங்கள் கூறப்படும். ஆனால் எதற்குமே ஆவணங்களோ ஆதாரங்களோ இருக்காது என்றார்.
இதுதவிர புது புது நடைமுறைகள், மறைமுக கண்காணிப்பு, அதிக வேலை நேரம் என பல்வேறு பிரச்சினைகள் துப்புரவுப் பணியாளர்கள் சிக்கியுள்ளனர். யாருமே செய்யத் துணியாத பணி இந்த துப்புரவுப் பணி. அப்படிப்பட்டவர்களின் உழைப்பு பாதியாக சுரண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.