மற்றவை

ஸ்கார்ஃபும் சுதந்திரமும்

செய்திப்பிரிவு

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30-ல், தேசிய வெற்றி நாள் கொண்டாடப்படும்போது, அதிபர் நடத்தும் மேற்கத்திய பாணி விருந்தில் துருக்கி உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதன் முக்கிய நோக்கம், துருக்கி மேற்கத்திய நாடுகளின் ஒரு அங்கம் என்பதைக் காட்டிக்கொள்வதுதான். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஸ்கார்ப் அணிந்து வருவது துருக்கியின் மேற்கத்திய பாணி பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்றே கருதப்படுகிறது.

தந்தைவழிச் சமூகத்தின் அடக்குமுறையிலிருந்து பெண்களை விடு விக்கும் நோக்கிலும், மேற்கத்திய வாழ்க்கை முறையை நோக்கிச் செல்லும் விதத்திலும், பெண்கள் தலையைச் சுற்றி அணியும் ஸ்கார்ஃப் துணியை (ஹிஜாப்) தடை செய்வது துருக்கியின் மதச்சார்பற்ற அரசின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இடம்பெற்றது. அரசு நிறுவனங்களில் ஸ்கார்ஃப் அணியும் பெண்களுக்குப் பணி மறுக்கப்படுகிறது.

ஸ்கார்ஃப் அணியும் பழக்கத்தால் சாதாரணப் பெண்கள் மட்டுமல்லாமல், முக்கியத் தலைவர்களின் மனைவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி குடியரசின் நிறுவனரும் முதல் அதிபருமான முஸ்தபா கமால் அதாதூர்க், மேற்கத்திய கல்வி பயின்ற லதீப் ஹனிமைத் திருமணம் செய்துகொண்டார். துருக்கியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர் ஹனிம். அவரும் தலையில் ஸ்கார்ஃப் அணியும் பழக்கத்தைக் கைவிட்டு, நவீன துருக்கிய பெண்களின் முன்மாதிரியாக இருந்தார்.

தற்போதைய அதிபர் அப்துல்லா கல்லின் மனைவி ஹைருன்னிசா கல்லும், ஸ்கார்ஃப் அணிவதாலேயே பலத்த விமர்சனங்களைச் சந்தித்துவருகிறார். ஒரு பொது நிகழ்ச்சியின்போது, மதச்சார்பற்ற கொள்கை கொண்ட உயர் சமூகப் பிரமுகர் ஒருவர் இந்தக் காரணத்துக்காக ஹைருன்னிசாவை அவமதித்தார்.

இதே பிரச்சினையை, துருக்கியின் முந்தைய பிரதமர் அஹமத் டவ்டோக்லுவின் மனைவி சாரா டவ்டோக்லுவும் சந்தித்துவருகிறார். இருவரும் தங்கள் பல்கலைக் கழக நாட்களிலிருந்து எதிர்கொண்டுவரும் பிரச்சினை இது. தங்கள் சுயதேர்வில் தலையிடும் அரசுக்கும் சமூகத்துக்கும் ஈடுகொடுத்துக்கொண்டு வெற்றிகரமாக இவர்கள் இருவரும் வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

- அல்ஜஸீரா தலையங்கம்

SCROLL FOR NEXT