மற்றவை

நாடகக் கலையிலிருந்து `கரோக்கி ஆர்கெஸ்ட்ரா’ வரை... - நெகமம் சி.எஸ்.சண்முகவடிவேலு

கா.சு.வேலாயுதன்

ஆயிரக்கணக்கான மேடை நாடகங்கள், நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்த நாடகக் கலைஞர்  நெகமம் சி.எஸ்.சண்முகவடிவேலு (74), தற்போது நாடகங்களுக்கு  வாய்ப்பில்லாததால் ‘கரோக்கி’ எனப்படும் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளை நடத்திவருவதாக தெரிவிக்கிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஏராளமான விருதுகள், கலைப் பொன்மணி, கலைமுதுமணி, டாக்டர் எம்ஜிஆர் விருது, சிவாஜி விருது, நாடகப் பொன்மணி, நாடகச் செம்மல் என்றெல்லாம் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஒரு பழைய டைரியையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். “சென்னை நடிகர் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகர் சத்யராஜ்,  ‘மூத்த கோவை நடிப்புக் கலைஞர்’  என்று கூறி இந்த டைரியைக் கொடுத்தார். கோவை கலைஞர்களை அவரைப்போல அங்கீகரிக்கும் நடிகர்கள் யாரும் இல்லை”  என்று நினைவுகூர்ந்தார். தொடர்ந்து அவரிடம் பேசினோம்.

சைனாக்காரன் நாடகம்!

“எனக்குப் பூர்வீகமே நெகமம்தான். அப்பா விவசாயி. பள்ளிப் படிப்பை நெகமத்தில் முடித்துவிட்டு, என்ஜிஎம் கல்லூரியில் பியுசி-யும், பிஎஸ்ஜி கல்லூரியில்  பி.ஏ.வும் படித்தேன். என் கலையுலக வாழ்க்கை 9-ம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கிவிட்டது. என் ஆசிரியர் ‘சைனாக்காரன்’ என்ற நாடகத்தை எழுதி, இயக்கினார். நான்தான் அதில் சைனாக்காரன்.

சைனா மொழியில் பேசி நடித்தபோது, பெரும் கைதட்டல்.  தொடர்ந்து, மருத நாட்டு மன்னன் என்ற மேடை நாடகத்தில் நடித்தேன். மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில், மரகத நாட்டு மன்னனாக நடித்தேன். அதே மேடை நாடகத்தை உள்ளூர் திருவிழாவில் அரங்கேற்றினோம். பொதுமக்களே நிதியுதவி வழங்கி, நாடகம் நடத்த உதவினர்.

அந்த சமயத்தில் பிஎஸ்ஜி கல்லூரியில்  நாடக மன்றம் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. எனக்கு சீனியராக நடிகர் நாகேஷ் இருந்தார். அவர்தான் நாடகமன்றப் பொறுப்பாளர். அவர் கல்லூரியை விட்டுச்சென்ற பின்பு, அவர் நடித்த அதே நாடகத்தில் நான் நடித்தேன்.  ‘ஜமீன்தார் கண்ணப்பன்’ என்ற நாடகம் கேடயம் வென்றது.

கல்லூரிப் படிப்பு முடிந்தும்கூட,  நாடகக் கொட்டகைகளைத்தான் தேடிப் போனேன். அப்போது, கோவை மாவட்ட நாடகக் கலைக்  கழகம் என்ற அமைப்பை கோவை  கலைஞர்கள் சேர்ந்து தொடங்கியிருந்தனர். அதில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். அப்போது, உயிரோவியம், மணிமண்டபம் என 16 நாடகங்களை மேடையேற்றினேன். பின்னர்,  வானொலி நாடகங்களுக்கும் சென்றேன்.

ஒரு வசனத்தை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசுவது, ஒரு பாத்திரத்தின் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையெல்லாம் கற்றுத் தந்தது வானொலி நாடகங்கள்தான்.

இதுவரை 700 வானொலி நாடகங்களுக்குமேல் நடித்துள்ளேன். அதேபோல, சென்னை தூர்தர்ஷனிலும் பல நாடகங்களில் நடித்தேன். பல்சுவை நிகழ்ச்சி, வயலும் வாழ்வும்,  கலை நிகழ்ச்சிகள் என நிறைய வாய்ப்புகள் வந்தன.

பறிபோனது திரைப்பட வாய்ப்பு!

இடையில் ஒரு பெரிய மனிதர் சிபாரிசில், சாண்டோ  சின்னப்பா தேவர்  படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.ஆனால், அதற்குள் வேறொரு நபருக்கு, வேறு பெரிய இடத்திலிருந்து சிபாரிசு வந்ததால், எனக்கான  வாய்ப்பு பறிபோய்விட்டது.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் ‘மணிமங்கலம்’ என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். அவர்தான் என்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக்கினார். சினிமா வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டதால், அதைத் தேடிப்போவதே வெறுப்பாக இருந்தது. தவிர, வீட்டுக்கு நான் ஒரே பையன். நாடகம், கூத்து என சுற்றுவது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே, வீடாறு மாதம், நாடகம் ஆறு மாதம் என அலைந்தேன். ஒருகட்டத்தில் மேடை நாடகங்கள், வானொலி, தூர்தர்ஷன் நாடகங்கள் என  நிறைய வாய்ப்புகள் இருந்ததால், அதிலேயே மூழ்கிப் போனேன்.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். இப்போதெல்லாம், கோயில் திருவிழாக்களில்கூட மேடை நாடகங்களை மக்கள் விரும்புவதில்லை. அரசுத் திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் அரசுப் பொருட்காட்சிகளுடன் நின்றுவிடுகின்றன. சில பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிக்கு மட்டும்  அழைப்பு வருகிறது. சில மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த  கலைஞர்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி பங்கேற்கும் கலைஞர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரத்தை, இப்போதுதான் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி உள்ளார்கள். நாடகக் கலைக்கு நிச்சயம் இதுபோதாது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் சினிமா, டிவி-க்கு செல்கின்றனர். ஆனாலும், பழம்பெரும் கலைஞர்களுக்கு  வாய்ப்பே இருப்பதில்லை.

கைகொடுக்கும் ‘கரோக்கி’

அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, ஒவ்வொரு அரசுத் திட்டம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நாடகங்களை  கொண்டுவர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு,  கலைப் பண்பாட்டுத் துறை சார்பாக வாய்ப்புக் கிடைத்து விடுகிறது. மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையமும் அவர்களுக்கு உதவுகிறது. ஆனால், நடிப்புக் கலைஞர்களை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கண்டுகொள்வதில்லை.

ஒதுக்கப்படும் நிதிகூட நடிகர்களுக்கு வந்து சேருவதில்லை. எனவே, ‘கரோக்கி’யை கையில் எடுத்திருக்கிறேன். கரோக்கி என்பது இசைக்கருவிகள் இல்லாமல்,  குறிப்பிட்ட பாடல்களுக்கான இசையை,  ஒரு ‘ஆப்’  மூலம் உருவாக்கப்பட்ட இசைக்கற்றை. அதை ஒலிக்கவிட்டால், பாடகர்கள் பாடும் நேரத்தில்,  அதற்குரிய இடைவெளி இருக்கும். அந்த நேரத்தில், அதே குரல் வளம் உள்ள,  மேடைப் பாடகரைப் பாட வைக்கும் இசை நிகழ்ச்சியாகும்.

இப்போது, இந்த வகை ஆர்கெஸ்ட்ரா  நிகழ்ச்சியை கோயில் திருவிழா நடத்துபவர்கள் பெரிதும்  விரும்புகிறார்கள். செலவும் குறைவு.  ஓரளவு குரல் வளம் உள்ள கலைஞர்களுக்கு,  பாடும் வாய்ப்பும், கணிசமான தொகையும் கிடைக்கிறது. அதனால்தான், நாடகக் கலைஞர்கள் ‘கரோக்கி ஆர்கெஸ்ட்ரா’வை நாடுகின்றனர்.  நானும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ‘கரோக்கி ஆர்கெஸ்ட்ரா’வை நடத்தி வருகிறேன்” என்று முடித்துக்கொண்டார் கலைஞர் சி.எஸ்.சண்முகவடிவேலு.

SCROLL FOR NEXT