கொடைக்கானலில் 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் வட மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ரேஸ் பைக்குகளில் இளைஞர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மலைச் சாலைகளில் சீறிப் பாய்ந்து சாகசப் பயிற்சி செல்வதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
2-வது சீசன் தொடக்கம்
கொடைக்கானலில் சாரல் மழை, மிதமான குளிர், சூரிய வெளிச்சமே இல்லாத குளிர்ச்சியான காலநிலை, மூடுபனி சூழ்ந்த பசுமைப் பள்ளத்தாக்குகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. அதனால், தற்போது வடமாநிலங்கள், கேரளம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டுப் பயணிகள்
இந்த சீசன் வரும் அக்டோபர், நவம்பர் வரை நீடிக்கும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரை கொடைக்கானலில் கடும் குளிர், மூடுபனி காணப்படுவதால் கனடா, இங்கிலாந்து, சுவீடன், இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருவார்கள். தற்போது 2-வது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஸ் பைக்குகளில் வடமாநில இளைஞர்கள், தமிழகத்தின் பிற மாவட்ட இளைஞர்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள், கார்களில் வருவதைத் தவிர்த்து தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே ரேஸ் பைக்குகளில் வந்து செல்கின்றனர்.
தற்போது, சென்னையில் போலீஸ் கெடுபிடி அதிகளவில் இருப்பதால், சென்னை, பெங்களூரு மற்றும் வடமாநில ரேஸ் பிரியர்களும் தற்போது கொடைக்கானலில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்கள், கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு, மலைச் சாலைகளில் ப்ராரி, டுக்காட்டி, யமகா, ஆடி, சுசுகி, ஹோண்டா உள்ளிட்ட ரேஸ் பைக்குகளில் மலைச் சாலைகளில் அதிவேகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது, மலைச் சாலை வளைவுகளில் பிரேக் பிடிக்காமல் கியர்களை மட்டுமே பயன்படுத்தி வேகத்தைக் கட்டுப்படுத்துவார்கள்.
கொடைக்கானலில் அபாயகர மான பள்ளத்தாக்குகள், கொண்டை ஊசி வளைவுகள், குறுகலான சாலைகளில் இந்த இளைஞர்கள் ரேஸ் பைக்களில் அதிவேகத்தில் சீறிபாய்ந்து செல்வது, எதிரே வரும் சுற்றுலாப் பயணிகள், அரசுப் பேருந்து, அரசாங்க வாகன ஓட்டுநர்களை பதறவைக்கிறது.
இதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரா கூறியதாவது: ’’ரேஸ் பைக்குகளில் செல்வது ஒரு மனோபாவம், இந்த மனோபாவம் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து நீண்ட தொலைவுள்ள சுற்றுலா நகரங்கள், பெருநகரங்களில் `லாங் ரைடு' சுற்றுலா வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் உயர்தட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டுமே ரேஸ் பைக்குகள் இருந்தன. தற்போது தொலைக்காட்சி, திரைப்படங்கள் மூலமாக சாமானிய இளைஞர்களும் ரேஸ் பைக்குகளை அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். சாலைகளில் ரேஸ் பைக்குகளில் சாகசம் செய்வதை அவர்கள் ஆண்மைக்கான அடையாளமாக நினைக்கின்றனர்.
சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள அனுமதி பெற்ற ரேஸ் சாலைகளில் இதுபோன்ற ரேஸ் பைக்குகளில் அவர்கள் சாகசம் நிகழ்த்தலாம். கொடைக்கானல் போன்ற அபாகரமான சாலைகளில் ரேஸ் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறப்பது பெரும் விபத்துகளை ஏற்படுத்தும். ரேஸ் பைக்குகளின் ஓவர் ஸ்பீடு, ரேஸ் டிரைவிங், வளைவுகளில் வாகனங்களை முந்துவதால் அடுத்தவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது’’ என்றார்.