வனத்தை சார்ந்திருந்த நேரடி கொள்ளைகள் தடுக்கப்பட்டாலும், மறைமுகமாக நடக்கும் வியாபாரக் கொள்ளைகளை தடுக்க முடியவில்லை. அதன் விபரீதமே குரங்கணி வனத் தீவிபத்தும், உயிர்ப்பலிகளும்.
அனுமதியில்லாமல் வனத்துக்குள் சென்றபோது ஏற்பட்ட விபரீதம் எனக் கூறப்படுவதால், ‘அனுமதியில்லாமல் எப்படி செல்ல முடியும்’ என்ற கேள்வி வனத்துறை மீது திரும்பியிருக்கிறது. எதிர்வினையாக, வனத்துறையினரும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றனர்.
26,345 சதுர கி.மீட்டர் பரப்பளவுள்ள தமிழக வனப்பகுதியை சில ஆயிரம் வன ஊழியர்களே பாதுகாக்க வேண்டும் என்பது உண்மை நிலை. வன அத்துமீறல்களைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் இல்லை என்பதால் வணிகரீதியான வன ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன.
மலையேற்றம், சுற்றுலா என்பதோடு நில்லாமல், வேட்டை, வனக்கொள்ளை என பிரச்சினை தீவிரமடைகிறது.
உதகையில் வனத்துறையின் சூழல் சுற்றுலாவை முறைப்படுத்திய முன்னாள் மாவட்ட வன அதிகாரியும், கோவை கவுரவ வன உயிரின காப்பாளருமான சி.பத்ரசாமி கூறும்போது, ‘தமிழகத்தில் 2000 முதல் 3000 ஹெக்டேர் வனப்பகுதியை ஒரு வனக்காப்பாளரும், ஒரு வனக்காவலரும்தான் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. பணியாற்றுபவர்களில் இளையவர்கள் 10 சதவீதம் மட்டுமே. காவல்துறையைப் போல வனத்துறையில் தனித்தனி பிரிவுகள் இல்லை.
வன அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தேவை. மலையடிவார ரிசார்ட்டுகளில் தங்கவைப்பது, இரவு நேர வனப்பயணம் அழைத்துச் செல்வது, நீண்ட தூர மலையேற்றம், வன விலங்குகளை காண்பது என த்ரில் அனுபவங்களை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 21டி (அத்துமீறி வனத்துக்குள் நுழைதல்) தவிர வேறெந்த சட்டமும் நடைமுறையில் இல்லை.
குரங்கணி விபத்தில் சிக்கிய குழுவில், அனுபவசாலிகள் யாரேனும் இருந்திருந்தால் அனைவரையும் காப்பாற்றியிருக்கலாம். வனத்துறை நடத்தும் சூழல் சுற்றுலாவில் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருப்பதாலேயே பிரச்சினைகள் குறைவு. எனவே புற்றீசல் போல பெருகும் வனச் சுற்றுலா நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்’ என்றார்.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் கூறும்போது, ‘தமிழகக் காடுகளை ஒட்டி அதிகரிக்கும் ரிசார்ட்டுகளும், அதில் விதிமுறைகள் மீறி நடத்தப்படும் வனப் பயணங்களும் அதிகரித்து வருகின்றன. வன உயிர்கள் செழுமை மிக்க காடுகளுக்குள் செல்லும்போது உள்ளூர் மக்கள் துணை,வனத்துறை அனுமதி,வழிகாட்டல் தேவை.
ஆனால் அட்வெஞ்சர் பயணம் அழைத்துச் செல்லும் பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவதில்லை. காட்டை ஒட்டி கட்டப்படும் ரிசார்ட்டுகளை தடுக்கவும் சட்டங்கள் இல்லை. 300 மீட்டருக்கு மேல் இருந்தால் மட்டுமே மலைதள பாதுகாப்புக்குழும நடவடிக்கை வருகிறது. இவ்விரு அத்துமீறல்களையும் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்றார்.