மற்றவை

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நீச்சல் பயிற்சி: சென்னை மாநகராட்சி சாதனை - பதக்கங்களைக் குவிக்கும் வீரர்கள்

டி.எல்.சஞ்சீவி குமார்

மூளை வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்கும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் சென்னை மாநகராட்சி இலவச நீச்சல் பயிற்சி அளித்துவருகிறது. சென்னையில் உள்ள மை லேடி பார்க் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தேசிய அளவில் 66 பதக்கங்களையும் மாநில அளவில் 300 பதக்கங்களையும் குவித்து, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.தற்போது திங்கள்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் சென்னை மாநகராட்சி பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் இங்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர, மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இங்கு இலவசமாக சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்படு

கிறது.இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி, ‘‘நீச்சல்போல மிகச் சிறந்த உடற்பயிற்சி வேறு கிடையாது. பள்ளிப் பருவத்திலேயே அனைவரும் நீச்சல் கற்கவேண்டும். மூளை வளர்ச்சி குன்றிய, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 10 பேர் கடந்த ஓராண்டாக இங்கு நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களது செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

நீச்சல் பயிற்சி எடுப்பதால் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மன நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்று மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘‘பொதுவாக கடுமையாக அல்லாமல் ரிலாக்ஸாக செய்யப்படும் எந்த ஒரு உடற்பயிற்சியும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் புத்துணர்வு பெற வழிவகுக்கும். தண்ணீரில் குதிப்பது, விளையாடுவது குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒன்று. தவிர, தண்ணீரில் குளிப்பது மருத்துவ ரீதியாக மிகச் சிறந்த தெரபி. அதனால், நீச்சல் பயிற்சியால் மூளை வளர்ச்சி மேம்படும் என்பது உண்மையே’’ என்றார்.

சிறப்புக் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி, மேயர் சைதை துரைசாமியின் ஏற்பாட்டில் மாநில, தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கும் நோக்கில் இங்கு ‘சென்னை மாநகராட்சி நீச்சல் குழு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் ஆண்டுதோறும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு திங்கள்கிழமை தவிர்த்து தினமும் காலை, மாலை தலா 2 மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்தை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் தினமும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில் இருந்து பாதாம், பிஸ்தா, முட்டை, பழங்கள், முளைக் கட்டிய பயிறுகள், பாரம்பரிய தானிய உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தேசிய அளவிலான போட்டிகளில் 11 தங்கம், 30 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் சுமார் 100 தங்கம், 200 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

தமிழக மாநகராட்சிகளிலேயே சென்னை மாநகராட்சியில் மட்டுமே இதுபோல இலவச நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல, அனைத்து மாநகராட்சிகளிலும் நீச்சல் குளங்களைக் கட்டி பயிற்சி அளிக்கவேண்டும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.

SCROLL FOR NEXT