மற்றவை

வீடெல்லாம் கூடு!

க.ரமேஷ்

“குருவிக் கூடு மாதிரி வீடு கட்டியிருக்கேன்” என்று சொல்லி பலர் அலுத்துக்கொள்வார்கள். உண்மையிலேயே வீடு குருவிக்கூடாக இருந்தால் எப்படி இருக்கும்..? அந்த வீடு சிதம்பரம் ஹரிகுமார் வீடாகத்தான் இருக்கும். வீட்டுக்குள் சகஜமாக குருவிகள் பறந்து திரிகின்றன. அவை தங்குவதற்காக திரும்பிய பக்கமெல்லாம் பானை வடிவிலான கூடுகள். சாப்பிட உணவு வகைகள். எத்தனை பேர் வந்தாலும், பயப்படாமல் அழகாய் வந்து போகின்றன குருவிகள். அந்த வீட்டில் குருவிகள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது.

பறவைகள் நேசனான ஹரிகுமார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர். வீடு முழுக்க குருவிக் கூடுகள்தான். உண்மையில் சொல்லப்போனால், குருவிக் கூடுகளுக்குள்தான் வீடே இருக்கிறது.

அவரை சந்தித்தோம். “பறவைகளின் சத்தங்களை கேட்பதே தனி சுகம். அதிலும் சிட்டுக்குருவிகளின் ‘கீச்..கீச்சை’ கேட்பது அலாதி சுகம்.

மனிதனின் வாழ்விடத்தில்தான் சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும். இப்படி மனதைக் கொள்ளை கொள்ளும் சிட்டுக்குருவிகள் கடந்த சில ஆண்டுகளாக நம்மிடம் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டில் 1,300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்ந்து வந்தன. அதில் பல இனங்கள் இப்போது அழிந்துவிட்டன. அவ்வாறு அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்றுதான் சிட்டுக்குருவி. அதை பாதுகாக்க வேண்டும் என்பதாலும், குருவிகளின் மீதுள்ள பிரியத்தாலும் தான் என் வீட்டை குருவிகளுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.

இதற்காகவே, வீட்டுக்கு அருகே இருந்த காலி இடத்தை வாங்கி அதில் மா, வாழை, கொய்யா, சாத்துக்குடி, மாதுளை,தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வைத்து இயற்கை உரங்கள் மூலம் வளர்த்து வருகிறேன். இதில் காய்க்கும் பழங்களை ருசிக்க பழம்தின்னி வவ்வால்களும், சில பறவைகளும் வரும்.

சிட்டுக்குருவிகளுக்காக வீட்டில் உள்ள மூலைகளில் பானைகளை ஓட்டை போட்டு வைத்திருக்கிறேன். பக்கத்திலேயே கம்பு தானியங்களும், கொஞ்சம் தண்ணீரும் எப்போதும் இருக்கும். இதை கொரித்து பசியாறி, தாகம் தணிக்கவே நாள்தோறும் சிட்டுகுருவிகள் வீட்டுக்குள்ளே வந்து போகும். இங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்கிறார்’’ இந்த குருவிப் பிரியர்.

SCROLL FOR NEXT