அகில இந்திய வானொலி நிலை யம் தேசிய அளவில் நடத்திய ‘சர்வபாஷா கவி சம்மேளனம்’ என்ற கவிதைப் போட்டியில், விழுப்புரத்தைச் சேர்ந்த கவிஞர் இரா.தமிழரசியின் ‘நாற்காலிகள்’ கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தமிழில் வாசிக்கப்பட்ட இந்த கவிதை, அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஜனவரி 25-ம் தேதி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் வாசிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற தமிழரசிக்கு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த விழாவில் பிரச்சார் பாரதி பரிசுத் தொகையுடன் விருது வழங்கி கவுரவித்தது.
கணவரின் ஊக்கத்தோடு தொலைதூர பாடத்திட்டத்தில் தமிழ் படித்து முனைவர் பட்டம் பெற்ற தமிழரசி, தற்போது கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ்த் துறை உத விப் பேராசிரியர். அவர் நம்மிடம் கூறும்போது, “புதுச்சேரி வானொலி நிலையம் நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சியில் அவ்வப்போது கவிதை வாசிப்பேன். அப்படி வாசிக்கப்பட்ட ‘நாற்காலிகள்’ கவிதை, போட்டியில் தேர்வு செய்யப்பட்டது. 18 ஆண்டுகளாக நடக்கும் இப்போட்டியில் இந்த ஆண்டுதான் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட் சான்றிதழ் (World Book of Record Certificate) கிடைத்தது.
தென்னக மொழி கவிஞர்கள் மட்டுமே சமூகத்தின் இன்றைய நிலையை பிரதிபலிக்கின்றனர். வட இந்தியாவில் படைப்புகளில் சமகால அரசியலை பேசுவதில்லை. தமிழ்க் கவிதைகளில் இயற்கை, மெல்லிய காதலுணர்வு, அழகிய நேசம் ஆகியவற்றை பாடுகின்ற போக்கு மாறியுள்ளது. சமூக சூழல் சீர்கேடு, வேலையில்லா திண்டாட்டம், உறவுச் சிக்கல்கள், நிறைவேறா காமம் ஆகியவை இன்றைய கவிதையின் பாடுபொருளாக மாறிவருகிறது. நேர்மறையான கவிதைகள் இருந்தாலும், இன்றைய தமிழ் கவிதைகள் பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன’’ என்றார்.
சோவியத் பண்பாட்டு மையம் நடத்திய கவிதைப் போட்டியில் ‘வீடுண்டு விளக்கில்லை’ என்ற இவரது கவிதை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட முதல் கவிதை. ‘ஒளிச்சிறை’, ‘மரக்கலம்’, ‘திரும் பும் பறவை’ உள்ளிட்ட கவிதை நூல்கள், 2 கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார் தமிழரசி.