தன்னிலை மறந்து எந்நேரமும் மெய் நிகர் உலகில் வீடியோ கேம்ஸில் மூழ்கித் திளைப்பவன் வன்யூ. நிஜ வாழ்விலோ வேலையில்லாமல் திண்டாடுகிறான். அவன் வீதியில் நடந்து வருகையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது ஓர் அலைபேசி. அதை அவன் கவனித்த தருணத்தில் அதற்கு வரும் அழைப்பை எடுத்துப் பேசுகிறான். தன்னுடைய அலைபேசியைத் தவற விட்டதாகவும் அதைத் திருப்பிக்கொடுத்து உதவுமாறும் எதிர்முனையில் ஒரு பெண் குரல் கெஞ்சுகிறது.
உரிய பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது திடீரென்று கைது செய்யப்படுகிறான். எது நிஜம், எது கற்பனை என்று புலப்படுவதற்குள் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசி ஆகிறான். அங்கே சக கைதிகள் காரணமே இல்லாமல் அவனை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வீடியோ விளையாட்டில் தான் கற்ற வித்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறான்.
அதிவேக டிஜிட்டல் வளர்ச்சியையும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளையும் விறுவிறுப்பான காட்சிகளில் விரிக்கும் ‘ஃபேப்ரிகேட்டட் சிட்டி’ (Fabricated City) என்ற கொரியத் திரைப்படத்தின் கதைதான் இது.
இந்தத் படத்துடன் ‘தி சீக்ரெட் யூனியன்’, ‘கான்ஃபிடென்ஷியல் அசைன்மெண்ட்’ ஆகிய படங்களும் சென்னையின் உலகப் பட ரசிகர்களைத் தேடி வரவிருக்கின்றன. சென்னை சேத்துப்பட்டில் உள்ள சார் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கத்தில் ஏப்ரல் 9 அன்று மாலை 7 மணிக்கு கொரிய இசைவிழாவும் நடக்கவிருக்கிறது.கொரிய பட விழா