நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு வரும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கு நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு என்றும் ஆங்கிலத்தில் ‘பல்மனரி எம்பலிசம்’ (pulmonary embolism) என்றும் பெயர். இது அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் நோய் என்றாலும் தற்போது இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் பார்முலா 1 இயக்குநர் திடீர் மரணமடைந்ததும் இந்த நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பினால்தான்.
தற்போதைய வாழ்க்கை உடலியக்கத்துக்கு எதிரான வாழ்க்கையாகும் எல்லாம் இருந்த இடத்திலிருந்தே கிடைக்கின்றன, நகர வேண்டிய அவசியமில்லை. டிவி, கணினி விளையாட்டுக்கள், உட்கார்ந்த இடத்திலிருந்தே பொழுதுபோக்கு என்று நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் நம் உடலின் இயல்பான இயக்கங்களை முடக்குவதாக உள்ளன. முன்பெல்லாம் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் இப்போது ஸொமாட்டோ உள்ளிட்ட ஆப்களின் மூலம் அதுவும் இருந்த இடத்துக்கு வந்து விடுகின்றன, எங்கும் நகர வேண்டாம், எதற்கும் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டாம் என்ற sedentary life style என்ற சொகுசு வாழ்க்கைக்குப் பழகி விட்டோம், ஆனால் நம் உடலுறுப்புகள் இதற்குப் பழகாது, நம் உடல் உறுப்புகள், உயிரிகளுக்கு பல்லாயிர ஆண்டுகளுக்கான தொடர்ச்சியும் வரலாறும் உள்ளது, புதிய லைஃப் ஸ்டைல்களுக்கு நம் உடலை அவ்வளவு சுலபமாக வளைத்து விட முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்வது நல்லது. இத்தகைய வாழ்க்கை முறை நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு நிலை தோன்றுவதற்கு மரபணு காரணங்கள் முதல் சுற்றுச்சூழல் காரணங்களும் உண்டு. முழுக்க முழுக்க மரபணு என்று கூற முடியாது, முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் காரணிகள் என்றும் கூறி விட முடியாது, மரபணு பதிவு (genetic imprint) சூழலிலும் சூழலை மரபணு உரு-இயல் மாற்றங்களும் (genetic mutation) தீர்மானிக்கின்றன. அதாவது மரபணு, சூழலியல் காரணிகள் ஒன்றில் ஒன்று ஊடுருவி நிற்றல்தான் பல நோய்களுக்கும் காரணம்.மருத்துவ உலகம் மரபணு காரணிகளை பிரதானமாக்குவதன் நோக்கம் அதில்தான் லாப வேட்டை உள்ளது, சுற்றுச்சூழல் காரணிகளை கருத்தில் கொண்டால் அது சமூகவியலாகும். சமூகவியலுக்கும் லாபவேட்டைக்கும் எப்போதும் ஒத்துப் போகாது.
பெருகி வரும் தூசுமண்டலம், சுற்றுச்சூழல் நாச காரணிகளை உற்பத்தி என்ற பெயரிலும் வேலை வாய்ப்பு என்ற பெயரிலும் வளர்ச்சி என்ற பெயரிலும் மனிதன் உற்பத்தி செய்து கொண்டிருப்பதால் ஏற்படும் நோய்கள். மனிதன் தான் வாழும் சூழலையும் அழிக்கிறான், மற்றவைகள், மற்றவர்கள், பிறன்மை, உயிரினங்கள், இனங்கள் வாழும் சூழலையும் அழிக்கிறான். தன் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போகிறான், கட்டுப்பாடற்ற உற்பத்தி, நுகர்வு அதனால் ஏற்படும் சூழலியல், உடலியல், உயிரியல் நாசங்கள் பற்றி அவனுக்கு யோசிக்க நேரமில்லை. உணவுச்சங்கிலியை அழிக்கிறான், உயிர்ப்பன்மைத்துவத்தை அழிக்கிறான். புதிய நோய்கள், மர்ம நோய்கள் எப்படி வராமலிருக்கும்? ஆனால் புதிய புதிய நோய்கள் புதிய புதிய சமூகவியல் தீர்வுகளை உருவாக்குவதில்லை, புதிய புதிய நோய்கள் புதிய புதிய லாபவேட்டை முதலாளிய கணக்கீடுகளையும் உற்பத்திகளையும் உருவாக்குகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டிய உலக அரசுகாள் முதலாளியத்தைத் தாங்கிப் பிடித்து கார்ப்பரேட் ஸ்டேட்களாகி விட்டன. இதற்குச் சாதகமான சொல்லாடல்களை, சொல்லாடல் களன்களை முதலாளிய ஊடகங்கள் உருவாக்கித் தருகின்றன. நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு இப்போதெல்லாம் அதிகரிக்க நகரங்களின் துப்புரவற்ற, சூழலியல் நாச காரணிகளே காரணம்.
நுரையீரல் அடைப்பு பெரும்பாலும் ரத்தக்கட்டின் மூலம் ஏற்படுகிறது, அதாவது இந்த ரத்தக்கட்டு நுரையீரலின் திசுக்களுக்கு ரத்தம் செல்வதை தடுத்து விடுகிறது. அப்படியென்றால் இது உயிர்க்கொல்லி நோய்தான் என்று புரிகிறது.
எம்பலிசம்- embolsim என்ற சொல் embolos என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து கிளைத்தது. இதன் அர்த்தம் ‘நிறுத்தம்’, அடைப்பு என்பதாகும். ரத்தக்கட்டு உடலின் ஒரு பகுதியில் உருவாகி ரத்தச் சுழற்சியுடன் சேர்ந்தே ரத்தக்கட்டும் சுழலும். பிறகு உடலின் இன்னொரு பகுதிக்குச் செல்லும் ரத்தக்குழாயை திடீரென அடைக்கும். உதாரணமாக நுரையீரல்.
எம்பலிசத்திற்கும் த்ராம்பஸ் (thrombus) என்பதற்கும் வேறுபாடு உண்டு. த்ராம்பஸ் ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே நிற்கும். எம்பலஸ் ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ... போ.. போ..’ என்று ரத்தம் போகுமிடங்களுக்கெல்லாம் செல்லும்.
பல்மனரி எம்பாலிசம் சில தரவுகள்:
* நுரையீரல் அடைப்பு இடர்பாடு வயதாக வயதாக அதிகரிக்கும்.
* இதன் அறிகுறிகள் மார்வலி, வேகம் வேகமாக மூச்சு விடுதல், ஒருமாதிரி தலைசுற்றல், மயக்க உணர்வு.
* கையிலோ, காலிலோ ரத்தக்கட்டு இருப்பவர்களுக்கு நுரையீரல் அடைப்பு ரிஸ்க் கொஞ்சம் கூடுதல்.
நோய் அறிகுறிகள்:
* நெஞ்சு வலி, மூச்சை உள்ளே இழுக்கும் போது சுரீர் என்ற ஒரு வகை நெஞ்சு வலி.
* இருதயத்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒழுங்கற்ற இருதயத் துடிப்பு
* மயக்கம்
* விரைவுகதி மூச்சுவிடுதல்
* இருமல், சிலவேளைகளில் வறட்டு இருமலாகவும் சில வேளைகளில் சளி, ரத்தத்துடன் கூடிய இருமலாக இருக்கலாம்.
* தீவிர நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம்.
* இன்னும் தீவிர சந்தர்ப்பங்களில் நினைவிழத்தல், மாரடைப்பு இதனால் மரணமும் ஏற்படலாம்.
நாம் நீண்ட நேரம் எந்த வித செயல்பாடுமின்றி படுத்துக் கொண்டேயிருப்பது, நீண்ட நேரம் கார் ட்ரைவிங், நீண்ட நேரம் விமானப்பயணம், இன்றைய உலகின் மிக மோசமான பழக்கமான மணிக்கணக்காக டிவி முன்னால் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது, சீரியல்களைப் பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. நாளொன்றுக்கு 5 மணி நேரம் அமர்ந்த இடத்திலேயே டிவி பார்ப்பவர்களுக்கு ரத்தக்கட்டு இதனையடுத்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். சரி 5 மணி நேரம் வேண்டாம் ஒரு இரண்டு, இரண்டரை மணி நேரம் பார்த்தால் ஒன்றும் ஆகாதே என்று சிலர் கேட்பது நம் காதுகளில் விழுகிறது, இதுவும் ரிஸ்க்தான், இதனால் மரணம் கூட ஏற்படுவதாக ஜப்பான் ஒசாகா பல்கலைக் கழக ஆய்வுகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன.
அதே போல் குழந்தைகள் இப்போதெல்லாம் உடல் இயக்க விளையாட்டுகளை விடுத்து செல்போன்களிலும் கணினியிலும் கேம்களை மணிக்கணக்காக ஆடிக் கொண்டிருப்பதும் பல்மனரி எம்பலிஸம் ஏற்பட பிரதான காரணமாக இருப்பதாக ஜப்பானிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் நகராமல் இருப்பது, இயக்கமின்றி இருக்கும் காலக்கட்டத்தில் நம் உடலின் கீழ் உறுப்புகளில் ரத்தம் தேங்கும். இயல்பற்ற ரத்த ஓட்டத்தினால் ரத்தக்கட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு.
அறுவை சிகிச்சை காரணமாக அல்லது பிறவற்றின் காரணமாக ஏற்படும் காயங்களினால் ரத்தக்குழாயில் சேதம் ஏற்படும் போது ரத்தக்குழாயின் உட்பகுதி குறுகும். இதனால் ரத்தக்கட்டு சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.
உரிய நேரத்தில் அறிகுறிகளைக் கண்டுபிடித்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல்மனரி எம்பாலிசம் சொல்பேச்சு கேட்கும். பெரும்பாலும் இதில் மரணம் நிகழ்வது அரிதுதான், ஆனால் மரணம் நிகழும்போது இதனை பெரும்பாலும் மாரடைப்பு என்றே கூறுவார்கள், ஆனால் நுரையீரல் அடைப்பாகவும் அது இருக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு நுரையீரல் சிறப்பு மருத்துவரை அணுகி இது பற்றி தெரிந்து கொள்ளலாம்.