வருவாய்த் துறை அதிகாரி கேட்ட லஞ்சப்பணம் தரமுடியாத நிலையில் விவசாயி ஒருவர் தனது எருமை மாட்டை அதிகாரியின் ஜீப்பில் கட்டிய பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திகம்கரைச் சேர்ந்த விவசாயி லஷ்மி யாதவ் ஏஎன்ஐயிடம் பேசியதாவது:
நிலத்தை தன் பெயருக்கு (பட்டா) மாற்றி தந்ததற்காக வருவாய்த் துறை அதிகாரி என்னிடம் லஞ்சமாக ஒரு லட்ச ரூபாய் கேட்டார். முதல் தவணையாக என்னால் 50 ஆயிரம் மட்டுமே அவருக்கு தர முடிந்தது. ஆனால் இரண்டாவது தவணையாக மீதிப் பணத்தை என்னால் தர இயலாத நிலையே தொடர்ந்தது. ஆனால் அவர் தொடர்ந்து என்னை மிரட்டிக்கொண்டேயிருந்தார்.
இதனால் நான் வேறு வழியின்றி அவர் மேற்கொண்டு லஞ்சப் பணத்திற்கு பதிலாக என்னிடம் உள்ள எருமை மாட்டை அவருக்கு வழங்க முடிவெடுத்தேன். லஞ்சத்திற்கு பதிரலாக அதை வைத்துக்கொள்ளட்டும்'' என்றார்.
இதுகுறித்து பல்தேவ்கர் மாவட்டத் துணை (சார்) நீதிமன்ற நடுவர் வந்தனா ராஜ்புத், ஊடகங்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
''தனது இரு நிலங்களின் பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக நயாப் தாலுக்கா வட்டாட்சியர். ரூ.1 லட்சம் கேட்டதாக விவசாயி லஷ்மி யாதவ் குற்றச்சாட்டுதெரிவித்துள்ளார்.
யாதவ்வின் முதல் பிரச்சினையுள்ள நிலம் லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதையும் உறுதி செய்துகொண்டேன். இப்பிரச்சினையில் சரியான முறையில் யாதவ் செயல்படுவதாகவே தெரிகிறது.
இதனால் தனது இரு நிலங்களை நிலப்பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்தது குறித்து நயாப் வட்டாட்சியரை தொடர்புகொண்டேன்.
அவரோ, விவசாயி நாடகமாடுகிறார் என்று கூறினார். இதன்பிறகே விவசாயியை அழைத்து எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் மனுவை எழுதி வாங்கினேன்.''
இவ்வாறு நீதிமன்ற நடுவர் வந்தனா தெரிவித்தார்.