மற்றவை

ஜன.8, 9-ல் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 20 கோடி பேர் பங்கேற்பர் - வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

மத்திய அரசுக்கு எதிராக வரும் 8, 9 தேதிகளில் தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 20 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்பர் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர்  சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், கவுரவமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8, 9 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள், 60 அகில இந்திய சம்மேளனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டத்துக்கான கோரிக்கை விளக்க சிறப்புக் கருத்தரங்கம், சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் பேசியதாவது: மத்திய பாஜக அரசு, கடந்த நாலரை ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை, உர விலை அதிகரிப்பு, பயிர் காப்பீடு கிடைக்காமை போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி நாடெங்கிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர்களுக்கு எதிராக புதிய சட்டங்களைக் கொண்டுவர பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

பணமதிப்பு நீக்கம் மூலம் நாட்டு மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால்  சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த நாலரை ஆண்டுகளில் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, 50 லட்சம் முதல் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் 137 சதவீதம் பொதுத்துறை பங்குகள் விற்கப்பட்டுள்ளன. எனவே, வரும் 8, 9 தேதிகளில் நடக்கும் நாடு தழுவிய போராட்டத்தில் 20 கோடி தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கேற்பர்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT