உலகம் முழுவதுமே ஒவ்வொரு ஆண்டும் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 71 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 101. ஆனால் பத்திரிகையாளர்களின் படுகொலை எப்போதுமே எண்ணிக்கை கணக்கில் மட்டுமே சேர்வதில்லை. சில நேரங்களில் அது மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கிறது.
`வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றிய சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஸோகியின் படுகொலை அப்படிப்பட்டதுதான். துருக்கியில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரக அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நுழைந்த கஸோகி, வெளியில் காத்திருந்த தனது காதலியைப் பார்க்க திரும்ப வராமலேயே போய் விட்டார்.
அடுத்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நம்பவே முடியாதவை. மோசமான படுகொலை, அதை மறைக்க நடந்த நாடகங்கள், முதலில் மறுப்பு பின்னர் கைகலப்பால் பத்திரிகையாளர் மரணம் என வெளியான ஜோடிக்கப்பட்ட விவரங்கள் உலகையே அதிர்ச்சி அடையச் செய்தன. துருக்கி நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்களால், சவுதி அரேபியாவுக்கு ஆயுதம் சப்ளை செய்வதையே நிறுத்தி விடலாமா என்றுகூட அமெரிக்காவே நினைத்தது.
கஸோகியை கொல்ல உத்தரவிட்டது சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான்தான் என சிஐஏ முடிவுக்கு வந்தது. ஆனால், சந்தேகத்தின் பலனை சல்மானுக்கு அளிக்க விரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தப் படுகொலை அவருக்கு தெரியாமலே கூட நடந்திருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். இறுதி உண்மை தெரியும் வரை சவுதி இளவரசர் மீது பழியைப் போடுவதில் அர்த்தமில்லை.
ஆனால், சவுதி மன்னருக்கு அடுத்து, இளவரசர் சல்மானை மன்னர் ஆக்கலாமா வேண்டாமா என்று சலசலப்பு கிளம்பியுள்ளது. இளவரசர் சல்மானுக்கு தொடர்பு இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே சவுதியின் 34 உறுப்பினர்களைக் கொண்ட சபை, அவரை அடுத்த மன்னராக்கும். தற்போதைய நிலையில் மன்னரின் சகோதரர் அகமது பின் அப்துல்அஸீஸ், மன்னருக்கு மாற்றாக கருதப்படுகிறார். அமெரிக்காவும் இதை விரும்புகிறது. அதே நேரம், இளவரசர் சல்மானை விட்டு விலக விரும்பாத அமெரிக்கா, ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்க அவர் விரும்புவதை குறை கூறியுள்ளது.
சொந்த நாட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அதிருப்தியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தையே கஸோகியின் கோரப் படுகொலை காட்டுகிறது. இந்த சம்பவம், தங்கள் முதலாளிகளை சந்தோஷப்படுத்த, அவர்களின் கூலிப்படைகள் செய்த காரியமாகக் கூட இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்துவதை நம்பவே முடியவில்லை. இதனால் நாடுகளுக்கு இடையேயான உறவுகளும் பாதிக்கப்படும்.
சவுதியை கண்டிப்பதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் வேலை வாய்ப்பில் பாதிப்பு, அதோடு ஆயுதங்கள் விற்பனை இழப்பு என பல பாதகமான விஷயங்கள் இருந்தாலும் ட்ரம்பின் கண்டிப்பான நடவடிக்கை சரியானதுதான். இல்லாவிட்டால், உலக நாடுகளின் தலைவராக செயல்படும் அமெரிக்கா, மனித உரிமையையும் சர்வதேச சட்டத்தையும் எப்படி காப்பாற்ற முடியும்?
கஸோகி கொலையில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட இருப்பதாகவும் சவுதி அரேபியா கூறியுள்ளது. இருந்தாலும் இது திட்டமிட்ட படுகொலை என்பதையும் இன்னமும் சடலம் கிடைக்காத நிலையையும் யாராலும் மறுக்க முடியாது. சடலம் துண்டுதுண்டாக வெட்டப்பட்டதாகவும் அமிலத்தை ஊற்றி சடலத்தை கரைத்து சாக்கடையில் விட்டதாகவும் பதறவைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கஸோகி படுகொலையில் ஒரு விஷயம் மட்டும் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. தனது திருமணத்துக்கு தேவையான ஆவணம் வாங்குவதற்காகத்தான் சவுதியின் துருக்கி தூதரகத்துக்கு கஸோகி சென்றார் என்றால், அதை அவர் வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்திலேயே வாங்கியிருக்கலாமே. உலகையே சுற்றிக் கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல் வர வேண்டிய அவசியம் என்ன? இதுதான் புதிராக இருக்கிறது.