மற்றவை

ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16 வரை முடக்கம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா நடவடிக்கை; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

செய்திப்பிரிவு

இலங்கை நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16-ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று உத்தரவிட்டார். பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, தனது பெரும்பான் மையை நிரூபிக்க நாடாளுமன் றத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் சிறிசேனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந் தவர். தனது கட்சியைச் சேர்ந்த முன் னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச வுக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்க வின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு அதிபரா னார். ரணில் பிரதமராக பொறுப் பேற்றார்.

இலங்கையில் அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான சுதந்திர கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் புதிதாக தொடங்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது.

இந்தத் தோல்விக்கு இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தில் ரணிலுக்கு எதிராக ராஜபக்ச நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு சிறிசேனா வின் சுதந்திர கட்சியும் ஆதரவு அளித்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் ரணில் வெற்றி பெற்றார். எனினும் பொருளாதார கொள்கைகள், அரசு நிர்வாகம் தொடர்பாக அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இரு வருக்குமிடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

சமீபத்தில் இலங்கை துறைமுகம் ஒன்றை இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க ரணில் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. இதற்கு சிறிசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி நடந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, இலங்கை சுதந்திர கட்சி அறிவித் தது. இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் பதவி நீக்கம் செய்ததுடன், புதிய பிரதமராக ராஜபக்சவுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் ரணில் விக்ரம சிங்க கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “நாடாளுமன் றத்தில் எனக்கு பெரும்பான்மை உள்ளது. நான் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன். என்னைவிட அதிக பெரும்பான்மை இருப்பதாகக் கருதுபவர்கள் நாடாளுமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை நாடாளுமன்றமே தீர் மானிக்கட்டும். இதற்காக நாடாளு மன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

இது திட்டமிட்டு உருவாக்கப் பட்ட நெருக்கடி. இதற்கு அவசியமே இல்லை. இதனால் நாட்டு மக் களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. நாடாளுமன்றத்தைக் கூட்டினால் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பெரும்பான்மையை நான் நிரூபிப்பேன்” என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற சிறிது நேரத்தில் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரையில் தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். வரும் நவம்பர் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன் றத்தைக் கூட்ட திட்டமிடப்பட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண் ணிக்கை 225. இதில் ரணில் கட்சிக்கு 93 இடங்களும் சிறிசேனா மற்றும் ராஜபக்ச கட்சிகளின் கூட்டணிக்கு 95 இடங்களும் உள்ளன. இதுதவிர இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (டிஎன்ஏ) 16, ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸுக்கு 7, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜே.வி.பிக்கு தலா 6, ஈ.பி.டி.பி ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. இதில் பெரும் பான்மையை நிருபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

7 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் 6 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ரணில் பலம் 106 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 7 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ராஜபக்சவுக்கு 18 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச தரப் பினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் உரிய நேரத்தில் சரியான முடிவை அறிவிப்போம் என்றும் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜபக்ச தோல்வியடையக்கூடும் என்ற நிலை இருந்தது. எனவே, புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கவே சிறிசேனா நாடாளுமன் றத்தை முடக்கி உள்ளதாக ரணில் கட்சியினர் கூறுகின்றனர்.

அதிபரை பதவிநீக்க தீர்மானம்

இதனிடையே, அதிபர் சிறிசேனா வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர ரணில் கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் இன்று நோட்டீஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வரு வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் ரணில் கட்சி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா அறிவுரை

அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வித வன்முறையிலும் ஈடுபடக் கூடாது. ஐநா ஜெனீவா உடன் படிக்கையின்படி மனித உரிமைக்கு இலங்கை அரசு மதிப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT