சென்னையில் நடந்து வரும் முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவதும் முடிவடையும்போது, தினமும் 600 முதல் 700 மெட்ரோ ரயில் சர்வீஸ் இயக்க முடியும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது சுமார் 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட் டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம் பேடு புறநகர் பேருந்து நிலையம், விமானநிலையம் போன்ற முக்கிய பகுதிகள் இணைக்கப்பட் டுள்ளதால், தினமும் பயணம் செய் யும் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அடுத்தகட்டமாக, வண்ணாரப் பேட்டையை (அண்ணாசாலை வழியாக), மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏற்கெனவே, தோண்டப்பட்ட சுரங்கம் வழியாக பாதைகள் அமைத்தல், சிக்னல் அமைத்தல், ரயில் நிலையங்கள் உருவாக்கல் போன்ற கட்டமைப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தவுள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் வேகமாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையை இணைத்திருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மெட்ரோ ரயில் பயணம் குறித்து மக்களிடம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை (9 கிமீ) சுரங்க தடத்தில் பாதைகள் அமைக்கப்பட்டு சிக்னல் அமைக் கும் பணி முடிந்துள்ளன. ரயில் நிலையங்களிலும் நடைமேடைகள், டிக்கெட் கவுன்டர்கள் அமைத்தல், லிப்ட், எஸ்கலேட்டர் அமைத்தல் என ஒட்டமொத்த பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தவுள்ளோம்.
எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டு இறுதியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கவுள்ளோம். இந்த சேவை தொடங்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் மொத்தம் 42 ரயில் களை இயக்க இலக்கு நிர்ண யித்துள்ளோம். மொத்த மெட்ரோ ரயில்களும் தற்போது எங்களிடம் தயார் நிலையில் இருக்கின்றன. இதில், தற்போது 25 மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பணிகளும் முடிவடையும்போது, மக்களின் கூட்டத்துக்கு ஏற்ப ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக 38 முதல் 40 மெட்ரோ ரயில்களை தினமும் இயக்குவோம். அதன்படி, தினமும் 600 முதல் 700 மெட்ரோ ரயில் சர்வீஸ் இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.