மற்றவை

ரெப்கோ வங்கியில் முறைகேடுகளா?- உயரதிகாரிகளுக்கு எதிரான வழக்கால் பரபரப்பு

ஹெச்.ஷேக் மைதீன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. வங்கி யின் உயரதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக, 1969-ம் ஆண்டில் மெட்ராஸ் கூட்டுறவு சங்கச் சட்டத்தின்கீழ் ரெப்கோ வங்கி தொடங்கப்பட்டது. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு வங்கியாக தொடங்கப்பட்டு, மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

வங்கி நிர்வாகம், மத்திய உள்துறை மற்றும் தமிழக பொதுத் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது. வங்கியின் போர்டு தலைவராக, தமிழக பொதுத் துறை செயலாளரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகப் பல்வேறு அரசுத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் செயல்படுகின்றனர். வங்கி தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் முடியும் நிலையில், நிர்வாகத்துக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

வங்கியின் உயரதிகாரிகள் சிலர், ஓய்வு வயது வரம்பை கடந்த பிறகும் உயர் பொறுப்புகளில் இருந்துகொண்டு, ஊக்கத் தொகை என்ற பெயரில் பெரும் தொகையை எடுத்துக் கொள்வதாகக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த சேகர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு பதிலளிக்குமாறு, மத்திய உள் துறைக்கும், தமிழக பொதுத் துறைக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், வங்கி நிர்வாகம் குறித்து ஊழியர்கள் பலரும் புகார் கூறத் தொடங்கியுள்ளனர். மற்ற வங்கிகளில் குறிப்பிட்ட ஒரு குழுவாக இயங்கும் உயரதிகாரிகள் சிலர், தங்களது ஓய்வு காலத்துக்கு சில மாதங்கள் முன்பு விஆர்எஸ் பெற்றுவிட்டு, ரெப்கோ வங்கியில் உயர் பொறுப்புகளுக்கு வருகின் றனர்.

இதனால், பல ஆண்டு களாக ரெப்கோவில் பணியாற்று வோருக்கு தகுதியான பதவி உயர்வு கிடைக்காமல் போகிறது என ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும், ரெப்கோ வங்கி ஊழியர்களுக்காக இதுவரை தொழிற்சங்கம்கூட இல்லை என கூறப்படுகிறது.

தொழிற் சங்கம் தொடங்க முயற்சி நடந்தபோதே, அதற்கு ஏற்பாடு செய்தவர்களை உயரதிகாரிகள் கட்டுப்படுத்திவிட்டனர் என்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின் றனர்.

இதுகுறித்து, ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குநர் வரதராஜனின் செயலாளர் ஓ.எம்.கோகுலிடம் கேட்டபோது, ‘‘வங்கி நிர்வாகம் வெளிப்படையாக எந்த முறைகேடுகளும் இன்றி, வலுவான நிதிக் கட்டமைப்புடன் செயல்படுகிறது. உயரதிகாரிகள் நியமனம் என்பது அரசால் முறைப்படி, பொது அழைப்பு விடுக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வேறு வங்கியில் பணியாற்று வோரும் தகுதியிருந்தால் விண்ணப்பித்து பதவிக்கு வரலாம். ஊழியர் சங்கம் இவ்வளவு ஆண்டுகளாக இல்லாவிட்டாலும் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டு, சங்கம் இயங்கத் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து எதுவும் பேச முடியாது’’ என்றார்.

ஊழியர் சங்க பிரச்சினை தொடர்பாக அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘‘ரெப்கோ வங்கியின் நிர்வாக பிரச்சினை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அங்கு தொழிற்சங்கம் இயங்க வில்லை என்பது தெரியும். முதலில் தொழிற்சங்கம் தொடங்க ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் என்ன ஆனது எனத் தெரியாது. ரெப்கோ ஊழியர்கள் தொழிற் சங்கம் தொடங்கி, எங்கள் அசோ சியேஷனுடன் இணைந்தால், அவர்கள் பிரச்சினைக்கு உதவத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

ஊழியர் சங்கம் விளக்கம்

புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ரெப்கோ வங்கிப் பணியாளர்கள் அசோசியேஷன் துணைத் தலைவர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரெப்கோ வங்கி பணியாளர்கள் அசோசியேஷன், கடந்த 2013 செப்டம்பரில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT