மற்றவை

வாய்ஸ் மெயிலும்.. ஆட்டுக்கார அலமேலுக்களும்..!- போடியில் சாதிக்கும் பெண்கள்

இரா.கோசிமின்

டு வளர்ப்பு ஆதிகாலத்து தொழில். அதிலும் நவீனமயம் பரவ இப்போது வாய்ஸ் மெயிலில் ஆடு வளர்ப்புத் தொழில் அமர்க்களப்படுகிறது. இப்படி, வாய்ஸ் மெயிலுக்கு வாடிக்கையாளர்களாக மாறி அசத்துகின்றனர் போடி சுற்றுவட்டார கிராம பெண்கள்.

கிராமப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிக்கிறது கால்நடை வளர்ப்பு. இதில் ஆடு வளர்ப்பு முக்கியமானது. கிராம மக்கள் பலரும் மாடு, கோழி வளர்ப்பதைவிட ஆடு வளர்ப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முறையான வழிகாட்டுதல் இல்லாமலேயே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோய்த் தாக்குதல் போன்ற சில பாதிப்புகள் ஏற்படும்போது ஆட்டை நம்பி இருப்போரின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு விடுகிறது.

இந்நிலையில், வாய்ஸ் மெயில் உதவியுடன் ஆடு வளர்ப்பில் முன்னோடியாகத் திகழ்கின்றனர் போடியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் செயல்படும் விடியல் அமைப்பு இவர்களுக்கு வழிகாட்டுகிறது. ஆடு மேய்க்கச் செல்லும்போதும், காடுகளுக்கு செல்லும்போதும் செல்போனை எடுத்துச் செல்கின்றனர்.

இந்த செல்போன்களுக்கு தினமும் காலை 10 மணி, பிற்பகல் 12 மணி, மாலை 4 மணி என வாரத்தில் 6 நாட்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பப்படுகிறது. ஒரு நிமிட அளவு கொண்ட இந்த வாய்ஸ் மெயிலில் ஒவ்வொரு முறையும் ஆடு வளர்ப்பு சம்பந்தமான உபயோகமான தகவல்கள் பகிரப்படுகின்றன. இந்த தகவல்களை பெற ஒருமுறை ரூ.100 கட்டணம் செலுத்தி சிம் கார்டு வாங்கினால் போதும்.

இதுகுறித்து விடியல் அமைப்பின் நிறுவனர் கே.காமராஜ் கூறுகிறார், “விவசாயிகள் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் திறமையையும் திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொழில்நுட்ப வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களை சென்றடைவதில் இடையூறுகள் உள்ளன. இந்த இடையூறுகளை போக்க நவீன தொழில்நுட்பம் உதவியாக உள்ளது. விவசாயத்துக்கு தேவையான தகவல்களை விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பெற வாழ்நாள் கல்வியை தொடங்க தீர்மானித்தோம்.

பெண்கள் அனைவரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். கம்ப்யூட்டர், ரேடியோவைக் காட்டிலும் செல்போன் பயன்படுத்துவது எளிது என்பதால், வாய்ஸ் மெயில் அனுப்பும் திட்டத்தை தேர்வு செய்தோம்.

பெண்களை ஆடு வளர்ப்பில் ஈடுபடுத்துவதற்காக சுய உதவிக்குழு மூலம் 9 ஆடுகள், ஒரு கிடாய், ஒரு செல்போன் வாங்க வங்கியில் கடன் பெற்றோம். வாய்ஸ் மெயில் மூலம் தினமும் ஆடு வளர்ப்பு சம்பந்தமான தகவல்களை அனுப்புவோம். பெண்கள் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டனர். இதனால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே, குறுகிய காலத்தில் தாங்கள் வாங்கிய கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தினர்.

ஆடு வளர்ப்பதோடு மட்டுமின்றி அவற்றை சந்தைப்படுத்துவதற்காக ஆடு வளர்க்கும் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கினோம். இந்த நிறுவனத் தில் 1050 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆடு வளர்ப்பவர்கள் தங்களிடம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள ஆடுகள் குறித்த விவரங்களை தெரிவிப்பார்கள். ஆடு தேவைப்படுவோர் இந்த கம்பெனியை அணுகும்போது உயிருடன் எடை போட்டு நேரடியாக ஆடுகளை விற்பனை செய்கிறோம். இதனால் இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்கப்படுவதுடன், நியாயமான பணமும் ஆடு வளர்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது. இந்த கம்பெனியில் கிடைக்கும் லாபமும் உறுப்பினர்களாக உள்ள ஆடு வளர்ப்பவர்களுக்கே வழங்கப் படுகிறது.

வாய்ஸ் மெயில் கேட்டு ஆடு வளர்ப்பவர்களிடமும் ஏனைய ஆடு வளர்ப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வாய்ஸ் மெயில் கேட்டு அதன் வழிகாட்டுதலின்படி வளர்க்கப்பட்ட ஆடு கள் கூடுதல் வளர்ச்சி இருந்தது” என்று அவர் கூறினார்.

ஆடு வளர்க்கும் பெண்கள் சிலர் கூறும்போது, “ஆடுகளை வாங்கும் போது எப்படி தேர்வு செய்வது, எப்படி பராமரிப்பது, எந்த காலத்தில் எந்த மாதிரி உணவைத் தருவது என அனைத்து தகவல்களும் வாய்ஸ் மெயில் மூலம் கிடைக்கிறது. எங்கள் கம்பெனி மூலம் நேரடியாக ஆடுகளை விற்கவோ, வாங்கவோ முடிகிறது. இதனால் நியாயமான வருவாய் கிடைக்கிறது” என்றனர்.

கிராமம் சார்ந்த ஆடு வளர்ப்பையும் அதை சந்தைப்படுத்துவதையும் வாய்ஸ் மெயில் மூலம் சாதித்திருப்பதன் மூலம், போடி நாயக்கனூர் பகுதியில் நிறைய ஆட்டுக்கார அலமேலுக்கள் உருவாகி இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT