மிகைப்படுத்துதல் நகைச்சுவையின் அடிப்படைகளில் ஒன்று. சில நேரங்களில் தவறான புரிதல் கூட நகைச்சுவைக்கு வித்தாகும். பெண்கள் வாகனம் ஓட்டுவது குறித்த 'நகைச்சுவை' விமர்சனங்களில் இவை இரண்டுமே அடங்கியிருக்கும்.
வாகனம் ஓட்டுவதில் ஆண்கள்தான் சிறந்தவர்கள் என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதைப் பற்றி பல வேடிக்கையான கருத்துகள் இங்கு நிலவுகின்றன. சில சமயங்களில், அது மிக மோசமான நகைச்சுவையாகவும் பகிரப்படுகிறது. மேலும், சாலைகளில் வாகனத்தை தவறாக கையாளுவது பெரும்பாலும் பெண்கள்தான் என்றும், குறிப்பாக, அவர்கள் தங்களது வாகனத்தை சரியான இடத்தில் பார்க் செய்ய எடுக்கும் முயற்சிகள் குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து எழுகின்றன.
இதுபோன்ற கருத்துகளுக்கும் காமெடிகளுக்கும் ரசிகர்கள் கூட்டத்தினரிடையே வரவேற்பு அதிகமாகத் தான் இருக்கிறது.
சமீபத்தில் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தற்செயலாக, அந்த ‘ஆண்கள் வட்ட’த்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த நாள் முடிவின்போது, அந்த ஏளன கும்பலுடன் இருந்தேனே என்று வருந்தினேன். ஏனெனில், என் சிறுவயது முதலே என்னுடன் இருந்த் ‘உற்ற’ நண்பர் ஒருவர், நான் ஓட்டுநர் உரிமம் வாங்க மேற்கொண்ட முதல் டெஸ்டை இங்கு நடக்கும் விவாதத்திற்குள் நுழைத்தார்.
நான் எதிர்க்கொண்ட ‘சோதனை’ முயற்சி
நான் ஓட்டுநர் உரிமம் வாங்க மேற்கொண்ட 'சோதனை' முயற்சி பற்றி இங்கு கூறியே ஆகவேண்டும். என் வாழ்க்கையில் நடந்த மிகத் துயரமான சம்பவம் அது. எனது முதல் முயற்சி படுதோல்வி அடைந்ததால், மீண்டும் என் ஓட்டும் திறமையை சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என்பது தனி கதை.
முதல் 'சோதனை’ ஓட்டத்தில் அனைத்தும் சரியாகத்தான் செய்த மாதிரி இருந்தது.
காரை ஸ்டார்ட் செய்ய, க்ளட்ச்சை (Clutch) மெதுவாக விடுவித்தப்படி, அக்சலேரட்டரை (Accelerator) மெதுவாக அழுத்தினேன். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, கார் ஓர் இன்ச் கூட நகரவில்லை. மீண்டும் முயற்சித்தேன், எனக்கு தெரிந்த தெய்வங்களை கொஞ்சம் பிராத்தனை செய்தபடி. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளை தாங்கி இருக்கிறேன்; தாண்டி இருக்கிறேன். ஆனால், இங்கு இரண்டாம் முறையும், நான் ஓர் அடி கூட நகரவில்லை. பதட்டத்தில், அக்சலேரட்டரைச் கடுமையாக அழுத்தினேன். நகரவே மாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுகொண்டிருந்தது.
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று அந்த தேர்வாளர் மிகுந்த முகச்சுளிப்புடன் சுளிப்புடன் கூறினார். அப்போதுதான் தெரிந்தது நான் அக்சலேரட்டருக்கு பதிலாக, இவ்வளவு நேரம் ப்ரேக்கை அழுத்திக்கொண்டிருந்தேன் என்று!
யார் சிறந்தவர்?
நான் மேலே குறிப்பிட்டிருந்த செய்திக்கும், இந்த சம்பவத்திற்கு என்ன சம்பந்தம் கேட்கிறீர்களா?
அன்று இந்த ‘சோதனை முயற்சி’யை எதிர்க்கொண்டதில் எல்லாரும் வெற்றி பெற்றனர், என்னை தவிர; அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனம் ஓட்டுவதில் ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடுகையில், பல சமயங்களில் பலத்தையும், திறமையையும் நாம் போட்டு குழப்பிக்கொள்கிறோம். ஆண்களாகிய நாம், இயற்கையில், சில ‘பலம் சார்ந்த’ செயல்களை நன்றாகவே செய்வோம். ஆனால், திறமையை அடிப்படையாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், ஆண்களும் பெண்களும் சமமே!
இது மட்டுமின்றி, ஒரு திறனை வளர்ந்துக்கொள்வதன் மூலம், பெண்கள் இயற்கையாகவே தங்களுக்கு இருக்கும் உடல் ரீதியான பாதகங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
உதாரணமாக, மோட்டார் விளையாட்டில் கலக்கும் அலிஷா அப்துல்லாவையும், பைக் ரேஸ்ஸில் அசத்தும் சித்ரா ப்ரியாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் திறமையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது, ஆண்களுக்கு எதிராக அவர்கள் களமிறங்கி வென்றபோதுதான். அவர்கள் ஆண்களுக்கு இணையாக மோட்டார் வாகனங்களை ஓட்டும் திறமையை வளர்த்துக்கொண்டார்கள். இந்த தன்னம்பிக்கை, சாலைகளில் சாதாரணமாக வண்டி ஓட்டும் மற்ற பெண்களை விட இவர்களை முற்றிலும் வேறுபடுத்தி காட்டுகிறது.
வாகனம் ஓட்டுவதில் இருக்கும் பாலின வேறுபாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டதில், சில தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, பெரும்பாலான பெண்கள் தங்களது வாகனம் ஓட்டும் திறன் பற்றி குறைந்த மதிப்பீடு வைத்திருக்கின்றனர். இந்த மனப்பான்மை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், பெண் ஓட்டுநர்கள் குறித்து பரவும் நகைச்சுவைகளும், ஏளனப் பேச்சுகளும்தான் இவற்றுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளன.
வாகனம் ஓட்டுவதைப் பொறுத்தவரையில், பாலினம் மீது குத்தப்படும் முத்திரை இரு பாலினத்தவரிடையே உடைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில், ஏற்கனவே வகுக்கப்பட்ட வாகனம் ஓட்டும் விதிகளின்படி, ஆண்கள் அறிவுரை கேட்கும் நிலையில் இருப்பார்கள்.
பொதுவாக, வாகனம் ஓட்டும்போது, ரிஸ்க் எடுத்து ஓட்டுபவர்கள் ஆண்கள்தான். சில சமயங்களில், அவர்கள் அப்படிசெய்யவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் பெண்களாக இருக்கிறார்கள்.
நான் கார் பந்தயங்களை பார்ப்பேன்; ரசிப்பேன். ஆனால், நான் கார் ஓட்டும்போது, ஆமை வேகத்தில்தான் ஓட்டுவேன். பெரும்பாலும் என்னுடன் பயணம் செய்யும் என் மனைவியின் வசவுகளை கேட்டவாறு!
உச்சபட்சமாக, அவள் கூறுவது இதுதான் - “நான் உங்களை விடவும் சிறந்த ஓட்டுநராக வருவேன்”
அவளுக்கு கார் ஓட்ட தெரியாது. ஒருவேளை அவள் தெரிந்துகொண்டால், என்னை விடவும் நன்றாக ஓட்டலாம்.
வாகனம் ஓட்டுவது ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. எப்படி ஓட்டுகிறார் என்பதுதான் முக்கியம்!
தமிழில்: ஷோபனா