சி
றந்த திருநாட்களாக இரண்டு விழாக்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஒன்று: ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்). மற்றொன்று: ஈதுல் ஃபித்ர் (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்) என்று அறிவித்தார்கள் என அனஸ் (ரலி) தெரிவித்தார்கள். (ஆதாரம்: அபூ தாவூது நஸயீ)
இதில் ஈதுல் ஃபித்ர் ரமலான் - மாதம் முழுவதும் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.
பெருநாளை எவ்வாறு கொண்டாடுவது?
பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை அணிவது ஸுன்னத்தாகும். ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது. ஆண்கள் நறுமணம் பூசிக்கொள்வது நபிவழியாகும். பெண்கள் புத்தாடை அணியலாம். ஆனால் நறுமணம் போன்ற வாசனைத் திரவியங்கள் அவர்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன.
பெண்கள் சிறுவர்களின் மீதும் கடமை
மாதவிடாய், பிள்ளைப்பேறு, இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள்கூட பெருநாள் தொழுகையில் பங்கேற்பதும் அங்கே நடைபெறும் குத்பா பேருரையைக் கேட்பதும் ஸுன்னத்தாகும். இவர்கள் தொழாமல் அங்கே அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் மாத விலக்கான பெண்கள் தொழும் இடத்தில் (சற்று விலகி) ஓரமாக இருக்கவேண்டும். (ஆதாரம்: புகாரி-974 முஸ்லிம்). பெருநாள் தொழுகைகளுக்கு சிறுவர்களையும் அழைத் துச் செல்ல வேண்டும்.
தொழுமுன் பேரீச்சம் பழம் உண்ணுவது
நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது பேரீச்சம் பழம் போன்ற உணவுகளை உண்டுவிட்டுச் செல்வதும் ஸுன்னத் தாகும்.
தக்பீர் சொல்லும் முறை
‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.’ ஆண்கள் சப்தமாக தக்பீர் சொல்லுவதும், பெண்கள் மெதுவாக தக்பீர் சொல்லுவதும் ஸுன்னத் நபிவழியாகும்.
ஈத் தொழுகையின் நேரம்
சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்தபிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபி வழியாகும்(புகாரி, அபூதாவூது, இப்னு மாஜா, ஹாக்கிம்)
அதான், இகாமத் கிடையாது
இரு பெருநாள் தொழுகைகளுக்கும் அதான், இகாமத் கிடையாது என ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பின் ஸுன்னத் கிடையாது
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்த தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் புகாரி – 989.
பெருநாள் தொழுகை இரு ரகஅத் களாகும்
முதல் ரகஅத்தில் தனா ஓதிய பிறகு ஏழு தக்பீர்கள் கூறவேண்டும். கூறும் சமயத்தில் கைகளை உயர்த்த வேண்டியதில்லை. பிறகு அல்ஹம்து மற்றும் வேறு சூராக்களை இமாம் சப்தமிட்டு ஓதவேண்டும். இரண்டாம் ரகஅத்தில் அல்ஹம்து ஓதுமுன் ஐந்து தக்பீர்கள் கூறவேண்டும். இதிலும் கைகளை உயர்த்த வேண்டியதில்லை. அதைப்போல தக்பீர்களுக்கிடையில் எதையும் ஓத வேண்டிய தில்லை.
குத்பா உரை
தொழுகை முடிந்த பிறகே குத்பா உரை நிகழ்த்தவேண்டும். நபி(ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் குத்பாவுக்கு முன்பே இரண்டு பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.
குத்பா உரையை கேட்பது
ஜும்ஆ உரையைப் போன்று பெருநாள் குத்பா உரையையும் காது தாழ்த்திக் கேட்பது அவசியமாகும். இதன் முக்கியத்துவம் புரியாது பலர் குத்பாவைக் கேட்காது எழுந்து சென்று விடுகின்றனர். கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இமாமின் குத்பா - பிரச்சார உரையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது பெருநாள் உரையைக் கேட்பதற்குத்தானே தவிர மைதானத்துக்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல.
பெருநாளில் பிரார்த்தனை (துஆ)
பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் அனைவரும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் நாம் பிரார்த்தனை (துஆ) செய்து கொள்ள வேண்டும்.
பெருநாளன்று வாழ்த்து தெரிவிப்பது
நான், அபூ உமாமா (ரலி) போன்ற நாயகத் தோழர்களுடன் இருந்தபோது, பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் அவர்களில் ஒருவருக்கொருவர், ‘தகப்பலல்லாஹு மின்னா, வமின்க’ என்று கூறிக்கொள்வார்கள் என முஹம்மது இப்னு ஸியாத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
மார்க்கத்துக்கு முரணானவை நிகழாது காத்தல்
‘பெருநாள் என்றாலே பொழுதுபோக்கும் நாள்! ஆரவாரமிக்க நாள்! உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நாள்’ எனக் கருதிக் கொண்டு நம்மில் பலர் வேடிக்கை விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் பொழுதைக் கழிக்கின்றனர். மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகள், வைபவங்களைத் தவிர்த்து ஒரு மாதகாலம் உள்ளத்தையும் உணர்வையும், பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தி பயிற்சி பெற்ற மாண்பார் நோன்புகள் இறைவனால் ஏற்கப்பட வேண்டும் என்ற உணர்வே நம்மிடம் மேலோங்கியிருக்க வேண்டும்.
‘அந்த நோன்புக்குரிய கூலியை இறைவன் ரமலான் முடிந்த பிறகே வழங்குகிறான்.’
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்!