மற்றவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிதாக தொலைக்காட்சி சேனல்

குள.சண்முகசுந்தரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக தமிழில் தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுக்காகவும் அவற்றுக்கு ஆதரவாகவும் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொலைக்காட்சி சேனல் எதுவும் கிடையாது. இந்தக் குறையை போக்கும் வகையில், தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்குவது தொடர்பாக அண்மையில் கட்சியின் உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்காக தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு அனைத்து பொறுப்பாளர்களும் இசைவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் பேசும்போது, ’’கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.

காலத்துக்கேற்ப நாங்களும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. அதனால்தான் தமிழகத்திலும் சேனல் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சேனல் நடத்திக்கொண்டிருக்கும் நபர் ஒருவர் அதை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளார். அவர் தனது சேனலை எங்களுக்குத் தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். “சேனலுக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறேனோ அந்தத் தொகையை மட்டும் கொடுத்தால் போதுமானது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஜனவரி அல்லது பிப்ரவரியில் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு சேனல் உதயமாகும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT