க
ரிசல் பூமியான திருப்பூரின் பருத்தி, முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது. அடுத்து, பின்னலாடைத் தொழில் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் வேலை தந்தது. நூலும், ஆடையும் மட்டுமல்ல, ‘நூலா’க்கத்திலும், வாசிப்பிலும்கூட கொடிநாட்டிவருகிறது திருப்பூர்.
திருப்பூர் மண் சார்ந்தும், மக்களின் வாழ்க்கை சார்ந்தும் பதிவுசெய்தவர்களில் முன்னோடி ஆர்.சண்முகசுந்தரம். ‘நாகம்மாள்’, ‘சட்டி சுட்டது’ போன்ற பல நாவல்களில் இப்பகுதி நிலவுடைமைச் சமூகம், மனித உறவுகள், சாதிய அமைப்புகள் பற்றி எழுதியவர் அவர். சமகால திருப்பூர் மக்களின் வாழ்க்கையை எம்.கோபாலகிருஷ்ணன், வா.மு. கோமு, ரத்தினமூர்த்தி, குழந்தைவேல் போன்றோர் நாவல் வடிவங்களிலும், மகுடேசுவரன், கோவை சதாசிவம், தாண்டவக்கோன் உள்ளிட்டோர் பிற வடிவங்களிலும் பதிவுசெய்துள்ளனர்.
இன்னொரு ஊடகமான சினிமா வாயிலாக, இம்மக்களின் வாழ்க்கையைச் சொன்னவர்கள் ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார், ‘முண்டாசுப்பட்டி’ ராம். இவர்களைப் போலவே 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறும்படங்களை வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர் மண் சார்ந்த கூத்துக்கலைதான் ‘அண்ணன்மார் சுவாமி கதை’. இன்றும் திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நிகழ்கலையாக அரங்கேற்றப்படுகிறது. இதனை எளிமையாக மு.கருணாநிதி நாவலாக்கினார். மூலக்கதையிலிருந்து நாவல், சற்றே விலகியிருந்தது என்றபோதும் வட்டாரக்கதையொன்றை மாநிலம் முழுவதும் கொண்டுசேர்த்ததில் அவருக்குப் பங்கிருக்கிறது. பழனிச்சாமிப் புலவர் போன்றோர் இப்பகுதி பற்றி பல மரபு வழிக் காவியங்களை இயற்றியுள்ளனர். அவரது காவியங்களில் ‘அழகுமலைக் குறவஞ்சி’ முக்கியமானது. இவரின் தந்தை புலவர் கருந்தும்பியின் பங்களிப்பும் முக்கியமானது. திருப்பூர் குமரனின் வாழ்க்கைப் பற்றிய சித்திரத்தில் முன்னணியில் நிற்பவர் அவருடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பி.எஸ்.சுந்தரம். அவரைத் தொடர்ந்து திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை ஜீவபாரதி, மு.பழனிச்சாமி, அனிதா கிருஷ்ணமூர்த்தி என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’, ‘கனவு இலக்கிய வட்டம்’, ‘பதியம்’ போன்ற அமைப்புகள் தொடர்ந்து இலக்கியச் செயல்பாட்டால் திருப்பூரின் நிலையை மக்களுக்குப் படைப்பிலக்கியத்தின் வழியே உணர்த்தி வருகின்றன. ‘திருப்பூர் தமிழ்ச் சங்கம்’ உலகளாவிய அளவில், தமிழ் எழுத்தாளர்களுக்கு 25 ஆண்டுகளாக விருது தந்து கௌரவித்துவருகிறது.
‘பின்னல் புக் டிரஸ்ட்’ கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவரும் வாசிப்பு முகாம்கள், புத்தகக் காட்சிகள், புத்தக தினம், குழந்தைகள் தினம் இவற்றை முன்னிட்டு நகரின் 100 இடங்களில் நடத்தும் புத்தகக் காட்சிகள் எல்லாம் வாசிப்பியக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்னகர்வுகள்.
நுகர்வு மயமாகிப் போன சமூகச் சூழலில் திரையரங்குகளும், திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய்விட்ட தமிழர்களின் வாழ்க்கையில், திருப்பூரில் உள்ள ஒரு நூலகம் 16 ஆண்டுகளாக வாசகர்களுக்கு வேடந்தாங்கலாக விளங்கிவருவது ஆச்சர்யம். அதுதான் ‘திருப்பூர் மக்கள் மாமன்றம்’ நடத்தும் நூலகம். இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயனடைந்துவருகிறார்கள். பெற்றிருக்கிறார்கள். இதை நிறுவிய சி.சுப்ரமணியன் எழுதிய, ‘திருப்பூரைச் செதுக்கிய சிற்பிகள்’ நூல் குறிப்பிடத்தக்கது.
திருப்பூரின் வரலாற்றை, அஜிதன் குப்புசாமி, சிவதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். இன்னும் விரிவான வரலாறுகள் வர வேண்டும். குமரன் மட்டுமல்ல, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தியாகிகள் பங்காற்றிய ஊர் திருப்பூர். பி.ஆர்.நடராஜன் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும், ‘சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்’ நூல் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. திருப்பூரின் வரலாறு பேசுவதுபோல் இம்மண்ணின் சூழலியல் பேசும் எழுத்துக்களும் இங்கே மிக அதிகம். அதை இன்னமும் உலகுக்கே முன்மாதிரியாக எடுத்துச் செல்ல வேண்டியது தமிழ்ப் படைப்புலகின் கடமையாக உள்ளது.
-சுப்ரபாரதிமணியன்,
‘கனவு’ சிற்றிதழ் மற்றும்
‘சாயத்திரை’,
‘மைக்ரேசன் 2.0’
உள்ளிட்ட நாவல்களின்
ஆசிரியர்.
தொடர்புக்கு:
subrabharathi@gmail.com