திண்டுக்கல் மாவட்ட மலைக் கிராமங்களில் முக்கிய போக்கு வரத்து வாகனமாக குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவை உணவு கிடைக்காமல் குப்பையைக் கிளறி சாப்பிடுவதால் மர்மநோய்கள் தாக்கி இறந்து விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மோட்டார் வாகனப் பயன்பாடு அதிகரிப்பால் குதிரை சவாரி, குதிரை வண்டிகளின் பயன்பாடு அரிதாகிவிட்டது. அநேக மாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே தற்போது குதிரை பயன் பாடு காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பசுமைக்காடு, வேளாம் பண்ணை, அரளிக்காடு, தவுட்டுக் கடை, பள்ளக்காடு, சிறுமலை புதூர், தொழுவக்காடு, பண்ணைக்காடு, பன்றிமலை, ஆடலூர், தாண்டிக்குடி மற்றும் பாச்சலூர் உள்ளிட்ட போக்கு வரத்து மற்றும் சாலை வசதி யில்லாத மலைக்கிராமங்களில் தற்போது வரை குதிரைகள்தான் முக்கிய போக்குவரத்து, பொதி சுமக்கும் வாகனங்களாக விளங்குகின்றன.
கொடைக்கானல், சிறுமலை மலைக்கிராமங்களில் வாழை, காபி, எலுமிச்சை, பலா, முந்திரி மற்றும் மலர்களை விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்கின் றனர். இப்பகுதி விவசாயிகள் குதிரைகள் மூலம்தான் இந்த விளைபொருட்களை விளைநிலத் தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். சிறுமலையில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே, பாண்டிய மன்னர்கள் குதிரை வண்டி, குதிரை சவாரி செய்துள்ளனர். சிறுமலையில் கருப்பு கோயில் என்ற பகுதியில் கோடைவாசஸ்தலத்துக்கு பாண்டிய மன்னர்கள் அடிக்கடி குதிரையில் வந்துசென்றதற்கான வரலாற்று அடையாளம் தற்போதுவரை காணப்படுகிறது. சிறுமலையில் தற்போது சுமார் 500 குதிரைகள் வரை உள்ளன.
உணவுத் தட்டுப்பாடு
குதிரைகள் கொள்ளு, இலை தழைகள், பழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன.
தற்போது சிறுமலையில் வறட்சி யால் குதிரைகளுக்கு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றை வளர்க்கும் உரிமை யாளர்கள், அவற்றைப் பராமரிக்க முடியாமல் கட்டவிழ்த்து விடுகின் றனர். இந்த குதிரைகள், மாடுகள் போல் சாலைகள், தெருக்களில் சுற்றித்திரிந்து குப்பைத் தொட்டி களில் குப்பைகளை கிளறி இலை தழைகள், கழிவு பழங்களை தேடிச் சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், மண்ணில் மறைந்திருக் கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் தாக்கி குதிரைகள் மர்மநோய், கால், உடல்களில் புண்களுடன் சுற்றித்திரிகின்றன. அதனால், குதிரைகளின் மரணம் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: குதிரைக்கு முதல் எதிரி உணவு பிரச்சினைதான். சரியான உணவுகள் வழங்காவிட்டால் வயிற்று வலி, டெட்டனஸ் நோய்கள் ஏற்படுகின்றன. குதிரைகள் பராமரிப்பு, தடுப்பூசி போடுவதற்கு அரசு சார்பில் நிதியுதவி இல்லை.
அதனால், சமூக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துகிறோம். வயது முதிர்வு காரணமாக மரணம் ஏற்படுகிறது. தற்போது எந்த மரணமும் ஏற்படவில்லை என்றார்.