மற்றவை

சாதனை படைக்கும் சைகை மொழி கிருஷ்ணா!

ர.கிருபாகரன்

கோ

வையைச் சேர்ந்த கல் லூரி மாணவர் கிருஷ்ணா 2 குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒன்று 5 நிமிடம், மற்றொன்று 15 நிமிடம். அடர்த்தியான வசனங்கள் ஏதும் இல்லை. மொத்த படமும் சைகை மொழியிலேயே நகர்கிறது; எளிதில் புரிகிறது. கதைக்கரு மனதை நெருடுகிறது. ரியல் எஸ்டேட்களாகும் விளைநிலங்கள், கடன் சுமையால் தற்கொலைக்கு உள்ளாகும் விவசாயிகள், விவசாயத்தை விரும்பாத இளம் தலைமுறை, இயற்கையின் முக்கியத்துவம் என நிகழ்கால பிரச்சினைகளை திரைவடிவில் வலியோடு பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணா.

கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த காது கேளாதோருக்கான சர்வதேச குறும்படப் போட்டியில், இந்த இரு படங்களும் விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளன. காரணம், இந்த இரு குறும்படங்களின் நடிகர்கள் அனைவருமே சைகை மொழியில் தேர்ந்த மாற்றுத்திறனாளிகள். இதில் இன்னும் ஓர் ஆச்சரியம்.. இந்த குறும்படங்களை இயக்கியுள்ள கிருஷ்ணாவும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறன் மாணவர்.

அவரது இந்த சாதனை குறித்து கேட்டபோது, சைகை மொழியில் பேசினார் கிருஷ்ணா. அர்த்தம் புரியாமல் நாம் சற்று விழிக்கிறபோது, எழுதி விளக்கினார். ‘‘கிரிக்கெட், படிப்பு, கம்ப்யூட்டர் என எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனால், காதில் ஹியரிங் எய்டு மட்டும் மாட்டப் பிடிக்காது. நிசப்தமும், சைகை மொழியும் ரொம்ப பிடிக்கும்.

விளையாட்டு, படிப்பு என்றுதான் இருந்தேன். தற்செயலாக ஒரு குறும்படத்தில் நடிக்க, அந்தப் படத்துக்கு 2015-ல் நடந்த சர்வதேசப் போட்டியில் விருது கிடைத்தது. அந்த நம்பிக்கையில்தான் குறும்படம் இயக்க முடிவு செய்தேன். ஏதாவது முக்கியமான பிரச்சினையை கதையாக கூற வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாய, இயற்கை பிரச்சினையை அதில் கொண்டு வந்தேன். நான் இயக்கிய இரண்டுமே சைகை மொழிப் படம்தான். ஆனால் எல்லோருக்கும் புரியும்படி இருந்தது. அதில், கந்துவட்டி வசூலிப்பவராக நானே நடித்தேன்.

விருது வாங்க என்னால் போக முடியவில்லை. படத்தைப் பார்த்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கண்ணீர் விட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது, நான் நிச்சயம் நல்ல இயக்குநராக வருவேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது’’ என்று உணர்ச்சி பொங்க சைகை மொழியாலேயே விவரிக்கிறார் கிருஷ்ணா.

அடுத்து, சினிமாவில் கதை சொல்லத் தீர்மானித்திருக்கும் கிருஷ்ணா, தமிழ்நாடு காதுகேளாதோருக்கான கிரிக்கெட் அணிக் காக விளையாடுகிறார்.

அவரது தந்தை வரதராஜனிடம் பேசியபோது, ‘‘கிருஷ்ணா குறும்படம் இயக்குகிறேன் என்று சொன்னதும் ஊக்கப்படுத்தினோம். நண்பர்களே கதை விவாதம் நடத்தி பழநி அருகே படப்பிடிப்பு நடத்தினார்கள். தங்களுக்கு தெரிந்த அளவுக்கு, தங்களால் முடிந்த அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். கிருஷ்ணாவின் சகோதரர் சப்டைட்டில், எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொண்டார்.

உண்மையில் கிருஷ்ணாவைப் போன்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல; மாற்றத்தை ஏற்படுத்தப் போகிற திறனாளிகள்” என்று நெகிழ்ந்தார்.

படங்கள்: ஜெ.மனோகரன்

SCROLL FOR NEXT