தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டை. குருபகவான் கோலோச்சும் திருத்தலம் இது. இங்கே எமன் வழிபட்டு அருள்பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
அன்னையின் சாபத்துக்கு ஆளாகிறான் எமன். ‘எந்தக் காலைத் தூக்கி அவமரியாதை செய்தாயோ, அந்தக் கால் உன்னிலிருந்து துண்டித்து விழட்டும்’ எனச் சபித்தாள் அன்னை. தந்தையிடம் நடந்ததைச் சொல்லி அழுதான். ‘தெய்வத்துக்கு நிகரானவள் அன்னை. அவளின் வாக்கு, தெய்வ வாக்கு. என்னிடம் முறையிட்டுப் பலனில்லை. பரமனைத் தொழுதால், பாவத்தில் இருந்தும் சாபத்தில் இருந்தும் விடுபடுவாய்’ என்கிறார் தந்தை சூரியனார்.
‘வேதங்களின் நாயகனாக, வேதநாயகனாகத் திகழும் ஈசன் குடிகொண்டிருக்கும் தென்குடித்திட்டை க்ஷேத்திரத்துக்குச் சென்று, சிவனாரை வழிபடுவாயாக!’ என்கிறார் தந்தை.
அதையடுத்து, திட்டை திருத்தலத்துக்கு வந்த எமன், சிவனாரின் ஏகாக்ஷரம் எனப்படும் ஓரெழுத்து மந்திரத்தை ஜபித்து வணங்கினான். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடும் தவம் புரிந்தான். அதில் மகிழ்ந்த சிவனார், எமனின் சாபத்தை நீக்கியருளினார். சாபவிமோசனம் அளித்தார். எந்த மந்திரத்தைச் சொல்லி எமன் ஜபித்தானோ, அந்த மந்திரத்தின் தேவதையாகவே ஆக்கினார் சிவனார்.
இதனால் புதிய தேஜஸைப் பெற்றான் எமன். அவன் கால்கள் சரியாகின. தெற்குத் திசைக்கு அதிபதியாகத் திகழ்ந்தான். இந்திரனுக்கு நிகரானவன் எனப் போற்றப்பட்டான். மக்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பலன்களைத் தரும் வல்லமையைப் பெற்றான். தர்மராஜனாகத் திகழ்ந்தான். எமதருமராஜனாக இன்றைக்கும் அருளிவருகிறான்.
தென்குடித் திட்டைக்கு வந்து எவர் வேண்டி வணங்கினாலும், அவர்களுக்கு எமபயம் விலகிவிடும். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்!
சிறுவயது முதலே நோயால் அவதிப்படுபவர்கள், மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்பவர்கள், எப்போதும் ஏதேனும் ஒரு வியாதியால் அவஸ்தைப்படுபவர்கள், இங்கு வந்து சிவனாரையும் தேவியையும் வஸ்திரம் சார்த்தி வேண்டிக் கொண்டால் போதும். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முடிந்தால் பரிகார ஹோமமும் செய்து வழிபட்டால் போதும். சகல வளத்துடன் நோய் நொடியின்றி வாழலாம். ஆயுள் பலம் பெருகும். ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உறுதி!