நந்தவனத்தில் அமர்ந்தபடி மலையையே , ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காந்திமதி. ‘தாயுமானவா... நேத்திக்கி வரை உன்னை மலையேறிப் பாத்துட்டுப் போனேன். வலியோ வேதனையோ இல்லாம பாத்துட்டுப் போனேன். ஆனா இன்னிக்கி வலி அதிகமாயிருச்சு. முதுகுப் பக்கம் நிரந்தரமா வலி உக்காந்துருக்கு. ஆடுகால் தசையெல்லாம் இறுக்கமாயிருச்சு. நடந்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. இன்னிக்கி உன்னை வந்து பாக்கமுடியுமா... தெரியலை. அடுத்தடுத்த நாள்ல, பாதிதூரம் வர்றதுக்கே தெம்பு இருக்குமான்னும் தெரியலை. ஆனா உன்னைப் பாக்காம, வழிபடாம ஒருநாளும் இருந்தது இல்லியே...’ என்று நினைத்தபடியே மலையைப் பார்த்தாள்.
காந்திமதி சாதாரணமானவள் அல்ல; சூரவதித்த சோழன் எனும் மன்னனின் மனைவி. அதுமட்டுமா? நாககன்னியாக பிறந்தவள், இந்த பூமியில் மானிடராக வந்து உதித்தாள். இவளது அழகில் மயங்கிய மன்னன், இவளைப் பற்றி அறிந்து வியந்து, இந்திரனின் அனுமதியுடன் காந்திமதியின் கரம்பற்றினானாம்!
என் அப்பனே... தாயுமானவா! உன்னை தரிசிக்க முடிஞ்சாலே போதும்‘ - மலையையே சிவபெருமானாக, தாயுமானவராக எண்ணி... கரம் குவித்து வணங்கினாள் காந்திமதி. மெள்ள விசும்பினாள். பெருங்குரலெடுத்து அழுதாள்.
அப்போது... அங்கே வில்வ வாசனை சூழ்ந்தது. காந்திமதி எனும் கர்ப்பிணிக்கு முன்னே ரிஷபாரூடராக, உமையவளுடன் காட்சி தந்தார் சிவபெருமான்.
‘கர்ப்பிணியான நீ இனி என்னை தரிசிக்க இவ்வளவு தொலைவு வரவேண்டாம். இதோ இங்கேயே என்னை தரிசிக்கலாம். உமையவள் உனக்குத் துணையிருப்பாள்’ என்று அருளி மறைந்தார். அந்த இடத்தில் இருந்து லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. பிறகு, இங்கேயே அம்மையையும் அப்பனையும் தரிசித்து வந்தாள் காந்திமதி. அடுத்து சுகப்பிரசவம் ஆனதாகவும், அதே நிறைவுடன் அம்மைக்கும் அப்பனுக்கும் கோயில் எழுப்பி வழிபட்டாள் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.
திருச்சி உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம். அம்பாளின் திருநாமம் குங்குமவல்லி அம்பாள். வளைகாப்பு அம்மன் என்றும் சொல்கிறார்கள்.
காந்திமதி எனும் பக்தையின் சுகப்பிரசவத்துக்கு அருளிய குங்குமவல்லியை வணங்கினால் சுகப்பிரசவம் நிச்சயம் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணுக்கு வளைகாப்பு நடந்தாலும், முன்னதாக குங்குமவல்லிக்கு கைகள் நிறைய வளையல்களை அடுக்கி அழகு பார்த்துவிட்டுத்தான், கர்ப்பிணிக்கு வளைகாப்பு விழா நடத்துகின்றனர்.
தாயைப் போல் கருணையும் கனிவும் கொண்டு காட்சி தருகிறாள் குங்குமவல்லி அம்பாள். கர்ப்பிணிகள் தினமும் இவளை தரிசித்துச் செல்கின்றனர்.
கரு சுமந்து பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள், குங்குமவல்லியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சுகப்பிரசவம் தந்தருள்வாள் வளைகாப்பு அம்மன்!