மற்றவை

குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் ‘தோழமை’: தந்தை விட்ட பணியை தொடரும் தனயன்

குள.சண்முகசுந்தரம்

குழந்தைகளுக்கு உரியது, உகந்தது, உதவக் கூடியது - சென்னையில் உள்ள தேவநேயனின் ‘தோழமை’ அமைப்பு இந்தப் பணிகளைத்தான் தேடித் தேடிச் செய்துகொண்டிருக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கோபிபாளையம் தான் தேவநேயனின் சொந்த ஊர். இவரது தந்தை அரசு, ஆசிரிய ராக பணியாற்றியவர். அவர், வீட்டில் இருந்த நேரத்தைவிட பள்ளியில் இருந்த நேரம்தான் அதிகம். குழந்தைகளை மேம்படுத்துவதற் காக, அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதற்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர். எந்நேரமும் குழந்தைகள் மத்தியிலேயே இருந்து பழகிப் போன அரசு, 1991-ல் பள்ளியில் இருக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்துபோனார். தந்தை மறைந்தவுடன் அவரது தாக்கம் மகனை பற்றிக்கொண்டது. சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி. இயற்பியல் படித்த தேவநேயன், குழந்தைகள் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்காக 2006-ல் அவர் ஆரம்பித்த அமைப்புதான் ‘தோழமை’.

தோழமையின் செயல்பாடுகள் குறித்து நமக்கு விளக்கினார் தேவநேயன்:

‘மனித உரிமை, பெண்ணுரிமை, திருநங்கைகள் உரிமை, குழந்தை கள் உரிமை, சுற்றுச் சூழல் சார்ந்த மனித உரிமைகள் இதெல்லாமே நமக்கு இப்போது கருணையாகவோ அல்லது சலுகையாகவோதான் தரப்படுகிறது. இவை அனைத்தும் கலாச்சாரம் சார்ந்த மாற்றமாக மலராத வரை உண்மையான மாற்றம் வராது. இதைத்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் மத்தியில் பிரச்சாரமாக செய்துவருகிறது ‘தோழமை’.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு எழுத கற்றுக் கொடுத்திருக்கிறோம். இதற்காக கிராமங்களில் ஆர்.டி.ஏ. க்ளினிக்குகளை நடத்தி வருகிறோம். சிங்காரச் சென்னை என்ற பெயரில் சென்னையில் உள்ள குடிசைகளை அடிக்கடி அப்புறப்படுத்துகின்றனர். இதனால், குழந்தைகள் அதிகமாகபாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. சென்னை செம்மஞ் சேரியில் 6,850 குடும்பங்கள் பாதிக் கப்பட்டு நின்றபோது, நாங்கள் அங்கு சென்று அந்த மக்களுக்கான அடிப்படை உதவிகளை செய்து கொடுத்தோம்.

எங்களது முயற்சியில், அங்கிருந்த நடுநிலைப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. அந்தப் பகுதியில் குழந்தை திருமணங்கள் அடிக்கடி நடந்தன. குழந்தை திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக தையல் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினோம். அந்தப் பள்ளியில் 20 பேர் பயிற்சி முடித்து தாங்களே தையல் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் 13 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கிறோம்.

கடந்த மூன்று வருடங்களில் 15 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். தமிழகத்தில் எந்த இடத்தில் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் நடந்தாலும் தோழமை அமைப்பு அதில் தலையிட்டு அந்தக் குழந்தைகளுக்கான நீதியை பெற்றுத் தந்திருக்கிறது. அடிப்பதற்கும் படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், சில ஆசிரியர்கள், அடித்தால்தான் குழந்தைகள் படிப்பார்கள் என்ற மனநிலையில் இன்னமும் இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களை போக்குவதற்காக மாவட்ட அளவில் ‘குழந்தைகள் பாதுகாப்பு அலகு’ என்ற அமைப்பு இருக்கிறது.தமிழகம் முழுவதும் இவர்களுக்கான பயிற்சியை நாங்கள்தான் கொடுத்து வருகிறோம்.தமிழகத்தில் 55 ஆயிரம் அங்கன் வாடி மையங்கள் இருக்கின்றன. இங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக்கான காய்கறிகள் வாங்குவதற்கு தினமும் தலைக்கு 25 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது. 500 மையங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பினோம். இப்போது, இந்த விஷயம் சட்டமன்ற விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

அண்மைக்காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன. இதுசமுதாயத்துக்கு நல்லதல்ல. எனவேஉடனடியாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது’ கவலை தோய்ந்த அக்கறையுடன் பேசினார் தேவநேயன்.

SCROLL FOR NEXT