‘தற்போதைய தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு நோபல் பரிசு அளிக்கப்படுவதாக இருந்தால், யாரை முன்மொழிவீர்கள்?’ என்று கோவை ஞானியிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அவர் தயங்காமல் முன்மொழிந்த பெயர் ‘எஸ்.பொ.’
தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டிருந்த எஸ்.பொ. என்கிறஎஸ்.பொன்னுத்துரைக்கு கனடா இலக்கியத் தோட்ட விருதைத் தவிர குறிப்பிடத்தக்க வேறு விருதுகள் அளிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். இலக்கிய விருதுகளை அவர் பெரிதாகக் கருதவும் இல்லை.
“இலக்கியம் என் ஊழியம்; தமிழ் என் தவம்; அழகு என் ஆராதனை; மனித விடுதலை என் மோட்சம்; சுதந்திரம் என் இயல்பு; மார்க்ஸியம் என் வேதம்” என்று பிரகடனப்படுத்தி, அதை வாழ்நாளெல்லாம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவர் எஸ்.பொ.
1932 மே 24-ம் நாள் நல்லூரில் பிறந்த அவரது வாழ்க்கை, போராட்டங்களும் சுவாரசியங்களும் நிறைந்தது. தனது சுயசரிதையை ‘வரலாற்றில் வாழ்தல்’ (2 பாகங்கள் அடங்கியது) எனும் நூலில் அவர் விரிவாக எழுதியுள்ளார். 2 ஆயிரம் பக்கங்களுக்கு விரிந்து செல்லும் அந்த நூல், 5 கண்டங்களில் வாழ நேர்ந்த எஸ்.பொ.வின் தனிப்பட்ட வரலாற்றை மட்டுமே சொல்லவில்லை; இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் சமூக,பொருளாதார, அரசியல் வாழ்க்கையும் அதில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து இலக்கியவாதிகள், கலைஞர்களுடனான உறவை அந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
எஸ்.பொ. என்றவுடன், தீவிர இலக்கியவாதிகள்கூட நினைவுகூரும் நாவல் கள் ‘தீ’, ‘சடங்கு’ ஆகியன. முற்போக்கு என்பதற்குப் பதிலாக ‘நற்போக்கை’ வலியுறுத்திய இலக்கிய வாதி என்பதுதான் எஸ்.பொ. மீதான முத்திரை. உண்மையில் அவரது பரிமாணங்கள் பன்மடங்கு பெரிது. சிறுகதை, நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், பதிப்பாளர் என்று பல்வேறு அடையாளங்கள் அவருக்கு உண்டு.
ஈழ விடுதலைப் போராட்டத்தில், கடல் போரில் இறந்த தன் மகன்‘மித்ர’வின் நினைவாக ‘மித்ர’ பதிப்பகத்தை சென்னையில் நிறுவினார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அதன்மூலம் கொண்டுவந்தார். தன் மகன் ஒரு போராளி என்பது, மித்ர இறக்கும் வரை அவருக்குத் தெரியாது. மித்ர பதிப்பகம் மூலமாக வெளிவரும் நூல்களை, தன் மகனுக்குச் செய்யும் அஞ்சலியாகவே கருதினார். அ.முத்துலிங்கம், பழமலய், தமிழச்சி தங்கபாண்டியன், பீர் முகம்மது, ரெ.கார்த்திகேசு, ஜீவகுமாரன், இந்திரன், இயக்குநர் மகேந்திரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களின் நூல்களைக் கொண்டு வந்தார்.
இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து அவர் தொகுத்த ‘பனியும் பனையும்’ என்ற நூல்தான் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய முதல் முழுத்தொகுப்பு. தன்னை ஒரு சிறந்த பதிப்பாசிரியராக இலக்கிய உலகம் அங்கீகரிக்கவில்லையே என்ற வருத்தம்எஸ்.பொ.வுக்கு இறுதிவரை இருந்தது.
புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி வரிசையில் தயக்கமின்றி எஸ்.பொ.வைச் சேர்க்கலாம். இவர்கள் யாரிடமும் இல்லாத ஒரு சிறப்பம்சமும் எஸ்.பொ.வுக்கு உண்டு. வாழ்நாளின் இறுதியில், 10 ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்தார். சிங்கள வரலாற்றைச் சொல்லும் ‘மகாவம்ச’ என்னும் நூலை மொழிபெயர்த்ததை அவர் தனது உச்சபட்ச சாதனையாகக் கருதினார்.
அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கதாக ‘பசி’,‘தேர்’,‘கடவுள் அடிமையானார்’, ‘பலிபீடம்’ ஆகிய கதைகளைச் சொல்வேன். ‘நனவிடைதோய் தல்’ என்னும் நூல்தான் அன்றைய யாழ்ப்பாணத்தைக் கண்முன் நிறுத்தும் வரலாற்று ஆவணம். 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தின் அழகையும், அதன் மண்வாசனையையும் தந்த பிறிதொரு நூல் தமிழில் இல்லை.
எஸ்.பொ.வை ஈழத்து ஜெயகாந்தன் என்று கூறியபோது அதை மறுத்து, ஜெயகாந்தனை வேண்டுமானால், ‘தமிழ்நாட்டின் எஸ்.பொ’என்று அழையுங்கள் என்றார். ‘எழுத்துப் போராளி’, ‘இலக்கியச் சண்டியர்’ என்ற அடைமொழிகளைச் சுமப்பதை அவர் பெருமையாகவே கருதினார்.
‘பாலியல் வக்கிரங்களை எழுதியவர்’, ‘ஆபாச எழுத்தாளர்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டதில் துளியும் உண்மை இல்லை என்றே கருதுகிறேன். ‘?’, ‘மாயினி’, ‘இனி’, ‘தீதும் நன்றும்’, ‘கீதையின் நிழலில்’ போன்ற நூல்களை வாசித்தால் மட்டுமே அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான நாவல் ‘மாயினி’. உலக இலக்கியங்களின் மீதும் அவருக்கு ஆழ்ந்த பரிச்சயம் இருந்தது.
எழுத்தாளர்களுக்கென்று தனித்த அடையாளங்கள், சுயமரியாதை வேண்டும். கூலிக்கு மாரடிக்கிறவர்களாக இன்றைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தன் கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார்.
ஒருமுறை இயக்குநர் பாலுமகேந்திரா கூறினார்: “நான் எத்தனையோ ஹீரோக்களை உருவாக்கியுள்ளேன். ஆனால், எனக்கு ஹீரோ எஸ்.பொ. தான்”.
எஸ்.பொ. என்றுமே பம்மாத்துகளை, வார்த்தை ஜாலங்களை நம்பியதில்லை. கோட்பாடுகள் மட்டுமே இலக்கியங்களைத் தோற்றுவிக்காது. இலக்கியம் என்பது கோட்பாடுகளை அல்ல; மனித வாழ்க்கையையும், உணர்வுகளையும் சார்ந்து இருக்கிறது என்று நம்பிச் செயல்பட்டவர். அதனால்தான், எந்த ஒரு கோட்பாட்டுக்குள்ளும் புகுந்துகொண்டு வேஷம் தரித்த போலிகளை மூர்க்கமாகச் சாடினார்.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை எழுத்துச் சமரனாகவே வாழ்ந்தார் எஸ்.பொ.
மரித்த பின்பும், வரலாற்றில் வாழ்பவனன்றோ பெருங்கலைஞன்!
கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார்தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக் கழகம்.