ஹலாசனம் எப்படி செய்வது என்று கடந்த தொடரில் பார்த்தோம். ஹலாசனம், தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போன்றவை சற்று சிரமமானவை. எனவே, எளிய ஆசனங்களைச் செய்து, உடலை ஓரளவு பக்குவப்படுத்திய பிறகு, இந்த ஆசனங்களைச் செய்யலாம். அனுபவமிக்க யோகா சிகிச்சை நிபுணர் களிடம் ஆலோசனை பெற்று, அவர்களது நேரடி மேற்பார்வை யில் செய்வது நல்லது. இதுபோன்ற தலைகீழ் ஆசனங்கள் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்வதும் அவசியம். வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
அர்த்த சந்த்ராசனம்: ஆண் களுக்கு அதிக வலிமை தரும் இன்னொரு முக்கிய ஆசனம் அர்த்த சந்த்ராசனம். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். 3-5 முறை நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி, பொறுமையாக குனிந்து கால் களுக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். வலது காலை நன்றாக பின்னோக்கி நீட்ட வேண்டும். இப்போது இடது கால் முட்டி நெஞ்சுக்கு அருகே இருக்கும். இந்த நிலையில் தலையைத் தூக்கி மேலே பார்க்க வேண்டும். 3 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். இதே நிலையில் இரு கைகளையும் நன்றாக மேலே தூக்கி நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். பின்னர், கைகளைப் பொறுமையாக கீழே இறக்கி, இரு கால்களையும் நேராக கொண்டு வந்து, மகராசனத்தில் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
கந்தராசனம்: அடுத்து, கந்தராசனம். நேராக படுத்துக்கொண்டு, கை, கால்களை உடம்பை விட்டு தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். 5-15 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இரு கால்களை யும் சேர்த்து வைத்து, மடக்கி குதிகால்கள் தொடைப் பகுதியை தொடுவதுபோல் வைக்க வேண்டும். இரு கைகளாலும் கால்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்துக்கொண்டு,
இடுப்பு, முதுகு பகுதியை மட்டும் மேலே தூக்க வேண்டும். கழுத்து, தலை, தோள்பட்டை, புஜம், உள்ளங்கால் ஆகியவை தரையில் இருக்கும். இதுதான் கந்தராசனம். பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே முதுகு, இடுப்பு பகுதியை கீழே இறக்க வேண்டும். பிறகு, கால்களையும் கீழே இறக்க வேண்டும். உடலைத் தளர்த்தி சாந்தி ஆசனத்துக்கு வரவேண்டும். தலா 10 எண்ணிக்கையில் 3-5 முறை இந்த ஆசனம் செய்யலாம்.
திரிகோணாசனம்: நேராக நின்றுகொண்டு, இரு கால்களையும் அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்துக்கொள்ள வேண்டும். சுவாசத்தை இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்பக்கமாக குனிந்து முட்டி மடங்காமல், வலது கையால் இடது பாதத்தை தொட வேண்டும். பாதத்தை தொட முடியாவிட்டால், முட்டியை பிடித்துக்கொள்ளலாம். முட்டி மடங்காமல் செய்தால்தான் முழு பலன் கிடைக்கும். இடது கையை காதை ஒட்டியவாறு வைத்து, விரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும். தலையை மெதுவாகத் திருப்பி, மேல்நோக்கி இருக்கும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். இந்த ஆசனத்தை 1-6 முறை செய்யலாம்.
மேற்கண்ட ஆசனங்கள் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இடுப்பு, முதுகு பகுதிகள் வளைந்துகொடுப்பதோடு, நன்கு வலுப்பெறும். வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, இதய நோய் உள்ளவர்கள் இவற்றை செய்யக்கூடாது.
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்