கடந்த 5 நாட்களில் டெங்குவால் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக டெங்கு காய்ச்சல் உள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் முதல்வர், அமைச்சர்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 5 நாட்களில் டெங்குவால் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு 40 பேர் தான் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் மருத்துவ அவசர காலம் ஏற்பட்டுள்ளது. டெங்கு விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது'' என்றார்.