பல அடுக்குமாடிக் கட்டிங்களின் உயரம் நம்மை பிரமிக்க வைக்கும். கட்டிடம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், அதன் அஸ்திவாரமே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அதுபோல, வாழ்க்கை ஓட்டத்துக்கு அடிப்படை அஸ்திவாரம் போன்றது வாலிப வயதை எட்டிப்பிடிக்கும் பருவம். இந்த வயதில் உடலையும், மனதையும் பக்குவப்படுத்த வேண்டியது அவசியம். இந்து வயதுப் பிள்ளைகள் மனதோடு, உடலையும் பக்குவப்படுத்தும் யோகாப் பயிற்சிகளை மேற்கொண்டால், 50 வயதுக்கு மேல் வரக்கூடிய அத்தனை நோய்களில் இருந்தும் விடுபட லாம்.
இந்த காலகட்டத்தில், சூர்ய நமஸ்காரம் மிக அற்புதமான ஆசனமாகும். இதுதவிர, ஹலாசனம், பச்சிமோத்தாசனம், சிரசாசனம் ஆகியவற்றையும் பயிற்சி செய்யலாம். இந்த ஆசனங்களை எப்படிச் செய்வது என்று கடந்த தொடர்களில் பார்த்தோம். சிறந்த யோகா நிபுணர்களிடம் இவற்றை முறையாகக் கற்று, பிறகு செய்யத் தொடங்கினால், நல்ல பலன் கிடைக்கும். யோகாசனங்கள் செய்ய வயதோ, ஆண், பெண் என்ற பாலின வேறுபாடுகளோ ஒருபோதும் தடையில்லை. முழுமையான ஈடுபாடும், தொடர்ந்து பயிற்சி செய்வதுமே முக்கியம்.
சிறுவர்கள் வளர்ச்சி அடையும் பருவத்தில் செய்யவேண்டிய சர்வாங்காசனம் குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம். இதய நோய், வெர்டிகோ, முதுகுவலி, ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. இடுப்பு வலி, வயிற்று வலி, காய்ச்சல் இருக்கும்போதும் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
உடலுக்கு நெகிழும் தன்மையோடு உறுதியையும் கொடுக்கிறது யோகா. அது மட்டுமல்லாமல், மனதையும் ஒருமுகப்படுத்துகிறது. மனப்பயிற்சியுடன் கூடிய உடற்பயிற்சிதான் யோகா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் செய்யக்கூடிய ஆசனங்களையே இத்தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்று நாம் அறிந்து கொள்ளும் ஆசனம் நவுகாசனம், அதாவது படகு நிலை.
நவுகாசனம் என்பது படகு நிலையில் நம்மை வளைத்து மேம்படுத்தும் ஆசனம். இந்த ஆசனம் வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிக்கு வலு சேர்க்கக்கூடியது.
முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கால்களைச் சற்று அகலமாக வைத்துக்கொண்டு, கைகளை உடம்பில் இருந்து சற்று தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக இழுத்து, பொறுமையாக விட வேண்டும்.
பிறகு இரு கால்களையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். கைகளையும் உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்று பகுதியில் உள்ள மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர், சுவாசத்தை நன்றாக உள் இழுத்தவாறு இரு கால்களையும் பொறுமையாகத் தூக்க வேண்டும். கால்களைச் சற்று உயர்த்தியதும், இரு கைகளையும் தொடைக்கு அடியில் வைத்துக்கொண்டு, பிறகு பொறுமையாக தலையை நேராகக் கொண்டுவர வேண்டும். இரு கைகளாலும் தொடைப் பகுதியை பிடித்தால், உடல் ஒரு படகு போல, ‘V’ வடிவில் இருக்கும். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் பதிந்திருப்பதால், ‘V’ போன்று இருக்கும் உடலின் பகுதி இங்கும் அங்குமாக, படகுபோலவே அசையும். தொடர்ந்து பயிற்சி செய்தால், இவ்வாறு அசைவதைக் கட்டுப்படுத்தலாம். சுமார் 10 எண்ணிக்கை வரை, நவுகாசன நிலையிலேயே இருக்கலாம். அதே நிலையிலேயே சிறிதுநேரம் இருக்கும்போது, வயிற்றில் ஒருவித அதிர்வை உணரலாம். பிறகு, மெதுவாக தலையை இறக்கிப் பிறகு, கை, கால்களையும் இறக்கவும்.
நவுகாசனம் செய்வதால் வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிகள் வலுவடையும். வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். வெர்டிகோ, முதுகுவலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்கு யோகாப் பயிற்சிகளை அளித்தால், தேவையற்ற விஷயங்களில் நாட்டம் செலுத்தாமல், கல்வியில் கவனம் செலுத்துவார்கள். எந்த வயதிலும் அவர்கள் உடல், மனம், உணர்வுகளை அலைபாய விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். இது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும்.
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்