ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 10 பெண்களுக்கு சிசேரியன் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று சொல்வதைவிட, மூடநம்பிக்கைக்கு வரவேற்பு வைபவம் நடத்தியிருக்கின்றார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
கர்ப்பிணிப் பெண், கருவில் உள்ள சிசு இருவருடைய அல்லது இருவரில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனச் சந்தேகிக்கும் சூழலில் மட்டுமே, சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த காலம் போய், மரணப்படுக்கையில் இருக்கும் முதியவர் பேரக் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுகிறார் என்பதற்காக அறுவைச்சிகிச்சையின் மூலம் அவசரகதியில் குழந்தையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவதும், ஆகாத மாதமென்ற பெயரில் தாய்-சேய் இருவரையும் அவதிக்குள்ளாக்குவதும் அவலமே! இயல்பாகக் குழந்தை பெற்றுக்கொள்வதே தாய்க்கும் சேய்க்கும் நல்லதென டாக்டர் கலைவாணியும், ஆடி மாதத்தில் குழந்தை பெறக் கூடாதென்ற தவறான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென ஜோதிடர் ஷெல்வியும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.