‘நீர், நிலம், வனம்' தொடரின் ‘மக்களின் ஆவணம் வரலாறு இல்லையா?' கட்டுரை வாசித்தேன். அதில் இடம்பெற்ற ‘தனுஷ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடலைக்' கண்டு எனக்கு அழுகை வந்தது. எங்கள் தாத்தா, அதாவது எங்கள் அப்பாவின் மாமா வேம்பார் பாக்கியம் இயற்றிய பாடல் அது. பாடலை முழுமையாக வெளியிட்டிருந்தீர்கள். எங்கள் ஊரில் நடைபெறும் குடும்ப விழாக்களில் கவி பாக்கியம் எழுதிய பாடல்களைப் பாடுவதுண்டு. பொது இடங்களில் இந்த தனுஷ்கோடி புயல் பாடலைப் பாடுவார்கள். இவ்வளவு புகழ் வாய்ந்த இவரின் பாடலை இதுவரை நாங்கள் யாரும் ஆவணப்படுத்தியது கிடையாது. வாய்மொழியாகவே பாடப் பட்டுவருகிறது.
‘தி இந்து’வில் வந்த கட்டுரையைப் படித்த பின்புதான் போத்தி ரெட்டி எங்கள் தாத்தாவின் பாடலைத் தொகுத்திருப்பதை அறிந்தோம். அந்தக் கட்டுரையையும் அதில் இடம்பெற்ற பாடலையும் எனது தந்தையாரிடம் (81 வயது) படித்துக் காட்டியபோது, அந்த நாள் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கண்கலங்கினார். வரலாற்று ஆவணமாய் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரில் எங்கள் மூதாதையரின் பாடலையும் இடம்பெறச் செய்த கட்டுரையாளருக்கும், ‘தி இந்து’வுக்கும் நன்றி!
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.