இப்படிக்கு இவர்கள்

மின்சார வாரியத்தின் குளறுபடி

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் மின்சார முறைகேட்டைத் தடுப்பதற்கு மின் நுகர்வோர் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதற்கான சுட்டி (Link) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சுட்டியின் வழியாக ஆதார் எண்ணை இணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. 2.63 கோடி பயனாளர்கள் இருக்கும் தமிழகத்தில், இணையப் பயனாளர்கள்கூட, இந்த நடைமுறை எளிதாக இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். இணையப் பயன்பாட்டை அறிந்திராத பெரும்பான்மையான மக்களுக்கு இந்த ஆதார் இணைப்பு பெரும் சிரமத்தைக் கொடுக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஓய்வூதியர் ஒருவர் தன் வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதற்கான செயலி, மிகவும் எளிய நடைமுறைகளைக் கொண்டுள்ளது. இந்தச் செயலியை எவரும் கையாளலாம். ஆனால் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் கொடுத்துள்ள இணைப்பு, சாமானியர்கள் பயன்படுத்த இயலாததாக உள்ளது. இந்த இணைப்பை எளிமைப்படுத்த வேண்டும். மின்துறை அமைச்சர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை 3 மாத காலமாக நீட்டிக்க வேண்டும். - வி.ராமராவ், சமூக ஆர்வலர், நங்கநல்லூர்.

கலைச்சொல்லைக் கட்டமைப்போம்...

நக்கீரன் எழுதிய ‘ஒரு கலைச்சொல் எப்படிப் பிறக்கிறது?’ என்ற கட்டுரை (23.11.22), தமிழ்மொழி தொடர்ந்து உயிர்ப்புடன் திகழ்வதற்கு அதன் கலைச்சொல் பெட்டகத்தைப் பாதுகாப்பதும் பெருக்குவதும் இன்றியமையாததாகும் என்பதை உணர்த்துகிறது. வெறும் பட்டறிவும் மேட்டிமைப்போக்கும் வாய்ந்ததாக இல்லாமல் மொழியின் இயல்பான, பரவலான வழக்குகளின் அடியொற்றி அச்செயல்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு நக்கீரன் வலியுறுத்தியுள்ளார்.

வேற்றுமொழியினரின் சிந்தனையால் விளைந்து, அவர்கள் மொழிகளிலேயே வழங்கப்படும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கங்களையும், வெறுமனே பெயர்த்து கலைச்சொல் பெட்டகத்தை நிரப்பும் வழக்கத்தையே நாம் பெரும்பாலும் கொண்டுள்ளோம். தமிழ்வழிக் கல்வி பற்றிய தயக்கங்களுக்கான முக்கியக் காரணமாகவும் இந்த இரவல் செயல்பாடே உள்ளது. எனவே, சொந்த மொழி வழக்குகளிலிருந்து கலைச் சொற்களை உருவாக்கிக்கொள்ள முனைவதோடு, சொந்த மொழியிலேயே பல்துறை சார்ந்த சிந்தனைகளையும் உருவாக்கங்களையும் நிகழ்த்துவதற்கான சாத்தியத்தை நாம் ஆராய வேண்டும். - தெ.சிவப்பிரகாஷ், சிவகங்கை.

SCROLL FOR NEXT